வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:35 IST)

ஓபிஎஸ்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ன?

தற்போதைய நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சீராய்வு மனு தாக்கல் செய்வது தான் என்கிற நிலை உள்ளது.
 
பாஜகவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீப காலமாக விலகி நிற்பதற்கான சமிக்ஞையை அவர் அளிக்க தொடங்கியிருந்தார். டெல்லியில் நடந்த ஏபிவிபி தாக்குதலுக்கு ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக முழுமையாக சென்று விட்டது. இனி ஓ பன்னீர்செல்வம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது.
 
பாஜக கொடுத்த நம்பிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு வழக்கைத்தான் முழுமையாக நம்பி இருந்தார். இப்போது தீர்ப்பு எதிராக வந்திருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சாதகமாக மாறி, மாறி தீர்ப்புகள் வந்துள்ளன. இறுதி தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ளதால் இனி அதிமுகவில் அவரது கையே ஓங்கி இருக்கும் என்ற நிலை உள்ளது.
 
ஓபிஎஸ்க்கு இனி என்ன வாய்ப்பு உள்ளது என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓபன்னீர்செல்வத்தை, சசிகலா பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக கூறப்படுகிறது.
 
இதனால் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இரவு 8.50 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன், தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார்.
 
இதுதான் ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம் ஆகும். அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
 
ஆனால் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அவரை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றனர்.
 
வானகரத்தில் இதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜுலை 23ம் தேதி கூட்டப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
 
அத்துடன் பொதுக்குழு கூட்டத்திலும் இபிஎஸ் உடன் ஒபிஎஸ் பங்கேற்றார். அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டவுடன் எழுந்த அமைச்சர் சி.வி.சண்முகம், "பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்" என ஆவேசமாக அறிவித்தார்.
 
ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக முழக்கமிட்டனர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதாலும் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 கூடும் என அறிவிக்கப்பட்டது.
 
இதனிடையே அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
 
இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஓ.பன்னீர்செல்வம். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.