வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (23:16 IST)

மனிதகுலம் தோன்றியது எப்போது? அறிவியல் ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்கள்

skull
மிஸ்ஸர்ஸ் பிளெஸ் என பெயரிடப்பட்ட ஆரம்பகால குகைவாழ் பெண்ணின் முழுமையான மண்டை ஓடு 1947ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.
 
மனித குலத்தின் மூதாதையர்களின் புதைபடிம எச்சங்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்திருந்ததைவிட இன்னும் மிக மிக தொன்மையானவை என புதிய ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
 
இவற்றில், மனிதகுலத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் குகைகளில் புதைக்கப்பட்டிருந்த 'மிஸ்ஸர்ஸ் பிளெஸ்' (Mrs Ples) என அழைக்கப்படும் பண்டைய குகைவாழ் பெண்ணின் புதைபடிம எச்சங்களும் அடக்கம்.
 
34 லட்சம் முதல் 37 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பகால மனிதர்களின் குழு பூமியில் சுற்றித் திரிந்ததாக, நவீன சோதனை முறைகள் பரிந்துரைக்கின்றன.
 
இந்த புதிய காலவரிசை மனித பரிணாம வளர்ச்சி குறித்த பொதுவான புரிதல்களை மாற்றியமைக்கக்கூடும்.
 
இதன்மூலம், நமது முன்னோர்கள் ஆரம்பகால மனிதர்களாக பரிணமித்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.
 
ஜோஹன்னெஸ்பர்க்குக்கு அருகில் உள்ள ஸ்டெர்க்ஃபோன்டைன் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் (Australopithecus africanus) இனத்தின் புதைபடிம எச்சங்கள், 26 லட்சம் ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடையவை என பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர்.
 
ஆரம்பகால மனிதர்களின் புதைபடிம எச்சங்கள் உலகிலேயே அதிகமாக இங்குதான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மிஸ்ஸர்ஸ் பிளெஸ் என பெயரிடப்பட்ட ஆரம்பகால குகைவாழ் பெண்ணின் முழுமையான மண்டை ஓடும் 1947ஆம் ஆண்டில் இங்குதான் கண்டெடுக்கப்பட்டது.
 
இரண்டு கால்களால் நடக்கக்கூடிய இந்த அழிந்துபோன இனம், நவீன கால மனிதர்களைவிட உயரம் குறைவானவை என ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. ஆண் இனம் சுமார் 4 அடி 6 இன்ச் (138 செ.மீ.) உயரமும், பெண் இனம் 3 அடி 9 இன்ச் (115 செ.மீ.) உயரமும் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
 
ஆரம்பகால மனிதர்களின் மூதாதையர்கள்
 
ஆனால், நவீன கதிரியக்க கால தொழில்நுட்ப பரிசோதனைகள் மிஸ்ஸர்ஸ் பிளெஸ் மற்றும் அதனை சுற்றி கண்டெடுக்கப்பட்ட புதைபடிம எச்சங்கள், முன்பு நினைத்திருந்ததை விட உண்மையில் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது.
 
புதைபடிமவங்களைச் சுற்றியுள்ள வண்டலைச் சோதித்ததன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
 
குகைவாழ் பெண்ணின் புதைபடிம எச்சம்
முன்னதாக ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் இனம், 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த நமது முன்னோர்களான ஹோமோஜீனஸ் மனித இனமாக பரிணமித்திருக்க முடியாத அளவுக்கு பழமையானது அல்ல என விஞ்ஞானிகளால் கருதப்பட்டது.
 
தற்போதைய கண்டுபிடிப்பு, அந்த பரிணாம பாய்ச்சலைச் செய்ய அந்த இனத்திற்கு 10 லட்சம் கூடுதல் ஆண்டுகள் இருந்ததாகக் கூறுகின்றன. மேலும், ஆரம்பகால மனிதர்களின் மூதாதையர்களாக மிஸ்ஸர்ஸ் பிளெஸ் மற்றும் அதனை சார்ந்த இனங்கள் இருந்ததாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
 
ஆரம்பகால மனிதர்களை தோற்றுவித்த இனமாக நீண்டகாலமாக கருதப்பட்டுவந்த ஆப்பிரிக்காவின் ஆஸ்த்ராலோபிதெகஸ் அஃபாரென்சிஸ் இனத்தைச் சேர்ந்த 32 லட்சம் ஆண்டுகள் பழமையான லூசி எனப்படும் குரங்கு இனத்தின் சமகாலத்தில் ஆஸ்த்ராலோபிதெகஸ் ஆப்பிரிகானுஸ் இனமும் வாழ்ந்துள்ளது.
 
இந்த புதிய காலவரிசையால், இவ்விரண்டு இனங்களும் தொடர்புகொண்டு இனப்பெருக்கம் செய்திருக்கக்கூடும் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் எங்கிருந்து வந்தனர் என்ற நம் புரிதலை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளனர், மனித இனத்தின் தோற்றம் அவ்வளவு எளிதான பரிணாம கோட்பாடாக இருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.
 
அதாவது, நம்முடைய குடும்ப மரம் "ஒரு புதரைப் போன்றது," என, பிரெஞ்சு ஆராய்ச்சியாளரும் இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்தவருமான லாரென்ட் பிரகெஸெல்ஸ் கூறுகிறார்.