வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (13:10 IST)

காண்டம் முதல் ஷூக்கள் வரை: பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

ஒருமுறை மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைவான பயன்பாடு கொண்ட, அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1ஆம் தேதி முதல் தடை செய்யப்படும்.

நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறியுள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை நாம் நிறுத்தினால் என்ன நடக்கும்? பிளாஸ்டிக் இல்லாமல் நம்மால் வாழ முடியுமா?

பிளாஸ்டிக் வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அரக்கு பூச்சிகளிலிருந்து சுரக்கும் பிசினை பிளாஸ்டிக் போன்று பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருளிலிருந்து தயாரிக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக் வகையான பேக்லைட், 1907ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரே செயற்கையான பிளாஸ்டிக், ராணுவ பயன்பாட்டையும் தாண்டி பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின், பிளாஸ்டிக் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து, 1950ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னாக இருந்தது, 2015 ஆம் ஆண்டில் 380 மில்லியன் டன்களாக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால் பிளாஸ்டிக், எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதமாகிவிடும்.

கட்டுமானம், போக்குவரத்து, மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சிகள், படுக்கை விரிப்புகள், ஆடைகள் என எண்ணிலடங்காத வகையில் நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது பிளாஸ்டிக்.

இதன் அர்த்தம், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை சாத்தியமானது அல்ல. ஆனால், நமக்கு திடீரென பிளாஸ்டிக் எங்கும் கிடைக்காமல் போனால் நம் வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும், இதற்கான புதிய நிலையான மாற்று ஒன்றை கண்டறிவதில் அது உதவும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

மருத்துவத்துறையில் பிளாஸ்டிக்

அதேசமயம், மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பது அழிவுகரமானது. "மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு பிளாஸ்டிக் இல்லாமல் இயங்குமா என்பதை நினைத்துப் பாருங்கள்" என, பிரிட்டனின் கீல் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பசுமை தொழில்நுட்பம் பிரிவின் மூத்த விரிவுரையாளர் ஷேரன் ஜார்ஜ் கூறுகிறார்.

மருத்துவமனைகளில் கையுறைகள், நோயாளிகளின் மாதிரிகளை சேகரிக்கும் டியூப்கள், ஊசிகள் என, பலவற்றில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறுவை சிகிச்சைகளில் மறுபயன்பாட்டு அறுவை சிகிச்சை கருவிகளுக்கு பதிலாக ஒருமுறை பயன்படுத்தத்தக்க கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மருத்துவமனைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக்குகள் அதிகளவில் இருப்பதாக, சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் வாதிடுகின்றனர். எனினும், தற்போது பெரும்பாலான பிளாஸ்டிக் மருத்துவக் கருவிகள் தேவையானதாக இருக்கின்றன, அவை இல்லையென்றால் உயிரிழப்புகள் நேரிடும்.
plastic

அன்றாட பிளாஸ்டிக் பயன்பாட்டு பொருட்கள் உடல்நலத்தைக் காப்பதற்கும் முக்கியமானதாகிறது. காண்டம் மற்றும் கருத்தடை சாதனங்களை உலக சுகாதார மையம் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களாக பட்டியலிட்டுள்ளது. அதேபோன்று, பிளாஸ்டிக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் சர்ஜிக்கல் முகக்கவசம் உள்ளிட்ட முகக்கவசங்கள், சுவாசக் கருவிகள், மறுபயன்பாட்டு துணியாலான முகக்கவசங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வேகத்தை குறைத்தது.

உணவுத்துறை

அதேபோன்று, உணவுத்துறையிலும் பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்தும். உணவுப்பொருட்களை பேக்கேஜ் செய்து பாதுகாப்பது முதல் அதுதொடர்பான விளம்பரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. "நமது அமைப்பிலிருந்து முழுவதும் பிளாஸ்டிக்குக்கு மாற்றை ஏற்படுத்த முடியும் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை," என, லண்டன் புரூனெல் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிர்வாகத்துறையின் பேராசிரியர் எலெனி லேகோவிடோவ் கூறுகிறார்.

விளைநிலத்திலிருந்து விளைபொருட்கள் சந்தையை வந்தடைவதற்கான நீண்ட பயணத்தில் பிளாஸ்டிக் பங்கு வகிக்கிறது. இதனால், உணவு விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்களை உபயோகிப்பது சில பலன்களை அளிக்கும். அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் மறுசுழற்சி செய்யலாம். ஆனால், ஒரு லிட்டர் கண்ணாடி பாட்டில் 800 கிராம் எடை கொண்டது, பிளாஸ்டிக் 40 கிராம் தான் எடையுடையது. இதனால், கண்ணாடி பாட்டில்களால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை நீண்ட தூரத்திற்கு வாகனங்களில் எடுத்துச் செல்வது கார்பன் உமிழ்வை அதிகரிக்கும்.

பேக்கேஜூக்கு பிளாஸ்டிக் மாற்றை கண்டறிவதைவிட, பண்ணைக்கு அருகிலான கடைகள், சமூக ஆதரவு விவசாயம் போன்று, உணவுச் சங்கிலியின் தொலைவை குறைப்பதில் கவனம் செலுத்தலாம். இதற்கு, எங்கு, எப்படி உணவை விளைவிக்கிறோம் என்பதில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

ஆடை உற்பத்தி

அடுத்ததாக, பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பது என்பது, நாம் அணியும் ஆடைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 2018 ஆம் ஆண்டில் 62 சதவீத துணி இழைகள் பெட்ரோகெமிக்கல்களால் ஆனவை. பருத்தி, சணல் ஆடைகள் நல்ல மாற்றாக இருக்கிறது. ஆனால், உலகம் முழுவதிலும் 2.5 சதவீத விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பருத்திக்கு 16 சதவீதம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது, நீர் மாசடைகிறது. பிளாஸ்டிக் இல்லையென்றால், நாம் மீண்டும் மீண்டும் அணியக்கூடிய அதிக நீடித்த பொருட்களுக்கு வேகமாக மாற வேண்டும்.

பிளாஸ்டிக் இல்லையென்றால், உலகில் ஷூக்கள் இல்லாமல் போய்விடும். 2020 ஆம் ஆண்டில் 20.5 பில்லியன் ஜோடி காலணிகள் தயாரிக்கப்பட்டன. "இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாம் தோலால் ஆன ஷூக்களை தயாரிக்க முடியாது… அது சாத்தியமானது அல்ல," என, ஷேரன் ஜார்ஜ் கூறுகிறார்.

என்ன தீர்வு?

பிளாஸ்டிக் தயாரிப்பின்போது அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், மனித உடலின் நாளமில்லா சுரப்பியை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய ரசாயனங்கள், பிளாஸ்டிக்கை மென்மையாக்க பயன்படுத்தப்படும் ப்தாலேட்டுகளில் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் அழகு சாதன பொருட்களில் காணப்படுகின்றன.

சில ப்தாலேட்டுகள் ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை பாதித்து விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. அதேபோன்று, பெண்களில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியையும் பாதித்து, மகப்பேறு தன்மையை பாதிக்கிறது.

உயிரி பிளாஸ்டிக்குகள், சோள மாவை அரைத்து தயாரிக்கப்படும் மாற்று பிளாஸ்டிக்குகளும் சூழலியலுக்கு சிறந்த மாற்று அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

எனவே, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு ஒன்றை கொண்டு வருவது நம் பிரச்னைகளை தீர்க்காது. அதற்கு பதிலாக, நமக்கு உண்மையில் அடிப்படையாக தேவைப்படும், அதாவது, உணவு, மருத்துவ துறையில் மட்டும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

(பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் கெல்லி ஓக்ஸ் எழுதிய கட்டுரை)