1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (16:52 IST)

இலங்கை போதைப்பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோட்டம்

Sri Lanka
இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர்.


புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு 8 மணியளவில் மோதலொன்று இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த அமைதியின்மையின்போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் தொடர்ந்து அமைதியின்மை வலுப் பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அமைதியின்மை வலுப் பெற்றதை தொடர்ந்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பிரதான நுழைவாயிலை, சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சுமார் 500 முதல் 600 பேர் வரையானோர், பிரதான நுழைவாயிலின் ஊடாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிவர்கள் யார்?

போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும்.

உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில், சுமார் 10,000 பேர் புனர்வாழ்வுக்கான ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.