வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (10:27 IST)

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற தெரீசா மே

பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரீசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி, ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று எம்பிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்னதாக நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு ஆதரவாக 325 வாக்குகளையும், எதிர்ப்பாக 306 வாக்குகளையும் பெற்று தெரீசா மே வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தெரீசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பும் இணைந்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை இரவில் எஸ்என்பி உள்பட சில எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் தெரீசா மே சந்தித்துள்ளார். ஆனால், இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கோபின் பங்கேற்கவில்லை.

''தொழிலாளர் கட்சியின் தலைவர் இந்த பேச்சுவார்த்தையின்போது பங்கேற்கவில்லை என்பதில் ஏமாற்றமே. ஆனால் எங்களின் கதவுகள் திறந்தே இருக்கும்'' என்று தெரீசா மே குறிப்பிட்டார்.

 

 

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதற்கு முன்பு, ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் திட்டத்திற்கு பிரதமர் தெரீசா மே உறுதியளிக்க வேண்டும் என்று ஜெர்மி கோபின் தெரிவித்திருந்தார்.

இதனிடையே மார்ச் 29-ம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டிய நிலையில், ஒப்பந்தம் ஒன்றும் இல்லாமலே வெளியேறுவதன் விளைவுகள் குறித்து பெரும்பாலோர் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், சிலர் அதை வரவேற்கின்றனர்.



ஒப்பந்தம் ஏதுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் இது வட அயர்லாந்து அமைதி ஒப்பந்தத்தை பாதிக்கும் என்று ஐரிஷ் பிரதமர் லியோ வரத்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மே, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பை மறுக்கவில்லை. பிரிக்ஸிட் திட்டமே தாமதப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

ஒருவேளை அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் 14 நாட்களுக்குள் இதே அரசாங்கமோ, அல்லது மாற்று அரசாங்கமோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறத் தவறினால் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தெரீசா மே ஆட்சியின் பதவிக் காலம் 2022 வரை உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலை தமது கன்சர்வேடிவ் கட்சி தமது தலைமையில் சந்திக்காது என்று தெரீசா மே ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.