திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:39 IST)

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் இ.முகமது
 
இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் இஸ்லாமிய சமூகத்தை மேலும் பின்னுக்கு தள்ளும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் இ.முகமது தெரிவித்துள்ளார்.
வஹாபிஸ கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை, அதை நாங்கள் முன்மொழிவதும் இல்லை. இறந்தவர்களை தர்கா அமைத்து வழிபடும் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வஹாபிஸத்தை பின்பற்றுகிறவர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், சிலர் எங்களை வஹாபிஸ்டுகளாக பார்க்கிறார்கள். எங்களுக்கு அந்த பின்புலம் கிடையாது, இஸ்லாம் மதத்தை மட்டும் பின்பற்றுகிறோம் என அவர் கூறுகிறார்.
 
தமிழகத்தில் சமூகப்பணிகளை செய்து, தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொள்வதாக கூறும் முகமது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களை எதிர்கொண்டது எப்படி, சந்தேகத்தின் பேரில் கைதாகும் இஸ்லாமிய இளைஞர்களின் நிலை பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசினார்.
 
 
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேசிய கள் என்ற அமைப்பு காரணம் என இலங்கை அரசாங்கம் சந்தேகப்படுகிறது. அந்த அமைப்பு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்துவந்த அமைப்பு. அதே சமயம் தவ்ஹீத் ஜாமஅத் என்ற பெயரை கொண்டுள்ள உங்களுடைய அமைப்பு மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் மீது பரவும் செய்திகளை பற்றி உங்கள் கருத்து என்ன?
 
இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்து வந்த அமைப்பு இல்லை. ஒருவேளை அந்த அமைப்பில் இருந்தவர்கள் யாராவது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்திருக்கலாம். எங்களுடைய அமைப்பின் முழுபெயர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தோடு எங்களுக்கு தொடர்புள்ளது.
 
இந்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு எங்களின் பிரதிநிதி. எங்களை பின்பற்றும் அமைப்பு. இந்த இரண்டு அமைப்புகளும் தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்ப்பவர்கள். இலங்கையில் நடந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத எங்களை பற்றி சந்தேகிக்கும் வகையில் செய்தியை ஒரு ஊடகம் வெளியிட்டது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடக்கூடியவர்கள் நாங்கள். ரத்ததானம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட சேவைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
 
இலங்கை சம்பவம் அதிர்ச்சிகரமான சம்பவம் என்பதில் மாற்றுகருத்து இல்லை. இதுநாள்வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அறியப்பட்ட அமைப்பாக எங்கள் அமைப்பு இருந்துவந்தது. ஆனால், இலங்கை சம்பவத்தை அடுத்து பலரும் எங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். நாங்கள் பல சமூகசேவைகளை செய்துவருகிறோம். ஆனால் எங்கள்மீது சந்தேக பார்வை ஏற்படுகிறது. நாங்கள் மட்டுமல்ல, இத்தகைய சூழலில் எந்த அமைப்பாக இருந்தாலும், ஒரு சோர்வு ஏற்படும். உறுதியோடு இந்த விவகாரத்தை எதிர்கொண்டோம்.
 
இந்த நேரத்தை எங்களைப் பற்றிய முழுவிவரத்தை தெரிவுப்படுத்தும் நேரமாக நாங்கள் நினைத்துகொள்கிறோம். காவல் துறையோ, இல்லை எங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களோ யாரவது வந்து எங்களிடம் கேள்விகள் கேட்டு, விசாரணை செய்வதை நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் என்னவிதமாக இந்த சமூகத்திற்கு பணியாற்றுகிறோம் என தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். தொடர்ந்து எங்கள் சமூகத்தை குறிவைத்து சந்தேகம் எழுப்பப்படுவது என்பது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.
 
 
சமீபத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தகவலை அனுப்பியது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆட்சியை இலங்கை, தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக்கவேண்டும் என தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் கூறிய காணொளி ஒன்று உள்ளது. கோவையில் உள்ள இளைஞர்களிடம் இந்த காணொளி இருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கூறுகிறது. இதைபற்றி உங்கள் கருத்து.
 
குண்டுவெடிப்பு சம்பவத்திற்குபின், அமரா மஜீத் என்ற பெண்ணிய செயற்பாட்டாளரின் புகைப்படத்தை சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவிட்டது. இது உலகம் முழுவதும், சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் அமரா மஜீதின் புகைப்படத்தை பாத்திமா என தவறாக வெளியிட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரியது. உளவு தகவல் என வெளியாகும் தகவல்களில் எவ்வளவு உண்மை, ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் படங்கள், பெயர்களில் எவ்வளவு குளறுபடிகள் உள்ளன என்பதற்கு இந்த சமீபத்திய ஆதாரம் ஒரு எடுத்துக்காட்டு.
 
அரசாங்கம் சந்தேகம் என கருதும் நபரின் பெயர் ஏன் ஒரு இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும்? தவறான தகவலை வெளியிட்டு மன்னிப்பு கேட்கிறார்கள், ஆனால் இந்த தகவலால் ஏற்பட்ட பாதிப்பை யார் சரிசெய்வார்கள்?
 
 
அடுத்ததாக சஹ்ரான் நச்சு கருத்துக்களை விதைக்கிறார் என இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அவரின் போக்கை எதிர்த்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிந்துகொண்டோம். விழிப்புணர்வு அடையாமல் இருந்தது இலங்கை. இந்திய புலனாய்வு அமைப்பு சொல்வதற்கு முன்பே இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டது என்ற உண்மையை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இந்த இலங்கை சம்பவதற்கு பிறகு உங்களின் செயல்பாடுகள் என்னவாக மாறும்?
 
நாங்கள் முன்பை போல சமூக சேவையை தொடருவோம், ஆறு மாதங்களுக்கு முன்பு, தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை செய்தோம். அதை மீண்டும் தொடரவேண்டும். மனிதநேயத்தை குர்-ஆன் எவ்வாறு போதிக்கிறது என்பதை மேலும் எல்லோருக்கும் எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபடுவோம்.