திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (14:03 IST)

சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று தெரியுமா? எப்போது தொடங்குகிறது?

ஏப்ரல் 30ம் தேதி தோன்றும் குறை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்று பார்ப்போம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது.
 
இது குறித்து கல்கத்தாவில் உள்ள விண்வெளி இயற்பியலாளரும், எம்.பி. பிர்லா பிளானடோரியத்தின் முன்னாள் இயக்குநருமான தேவிபிரசாத் துரை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது.
 
"ஏப்ரல் 30ம் தேதி தோன்று குறை சூரிய கிரகணம் தென் அமெரிக்க கண்டத்தின் தென் மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களிலும், அண்டார்டிகாவின் பெருமளவு நிலப்பகுதியிலும் தெரியும்" என்றார்.
 
இதன் பொருள் அர்ஜென்டினா, உருகுவே, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளிலும், அண்டார்டிகா கண்டத்திலும் உள்ளவர்கள் இந்த குறை சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
 
வழக்கமாக சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தொடங்கும், புவியின் சுழற்சி காரணமாக வேறோர் இடத்தில் முடிவடையும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்ததாக கூறுகிறது பிடிஐ.
 
எந்த நேரத்தில் கிரகணம் தொடங்கும்?
இந்திய நேரப்படி இந்த சூரிய கிரகணம் மே மாதம் 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் தொடங்கும். அதிகபட்சமாக இந்தியாவில் தொடங்கும் நேரம் அதிகாலை 2.11. அதிகபட்சமாக இந்தியாவில் அதிகாலை 4.07 மணிக்கு முடிவடையும்
 
இது இரவு நேரம் என்பதால், இந்தியாவில் யாரும் இதைப் பார்க்க முடியாது என்கிறார் தேவி பிரசாத் துரை. இதைப் போலவே மே 16ம் தேதி நிகழும் சந்திர கிரகணமும் தலைகீழாகவே நடக்கும். அது இந்தியாவில் பகல் நேரத்தில் நிகழும் என்று தெரிவித்துள்ளார் அவர். இந்திய நேரப்படி அது காலை 7.02 மணிக்கு தொடங்கும். முழுமையாக சந்திரன் காலை 7.57க்கு மறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆசியாவிலேயே தெரியாது
இந்த சூரிய கிரகணம் குறித்து பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதியிடம் கூடுதல் தகவல்களை பகிர்ந்துகொண்ட மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், "தற்போது வரக்கூடிய இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே தெரியாது. ஆசியாவில் இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில்தான் நடக்கும். சூரிய கிரகணத்தை பகலில்தான் பார்க்க முடியும், அதைப்போல சந்திர கிரகணத்தை இரவில் தான் பார்க்க முடியும். உலகம் முழுவதும் இந்த கிரகணங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை நிகழும்.
 
சில சமயம் அது மூன்று முறை கூட நிகழலாம். இவை முழு சூரிய கிரகணமாகவோ பகுதி சூரிய கிரகணமாகவோ நிகழலாம்," என்று குறிப்பிட்டார் வெங்கடேஸ்வரன்.
 
அறிவியலுக்கு புறம்பான தகவல்கள்
மேலும் இது பற்றி கூறிய வெங்கடேஸ்வரன், "சூரிய கிரகணம் ஏற்படும்போது அறிவியலுக்குப் புறம்பான பல தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் மூட நம்பிக்கைக்கு எதிரான பாரம்பரியம் நீண்ட காலமாக இருக்கிறது. புத்தர், லல்லாச்சாரிய மற்றும் ஆரியபட்டா உள்ளிட்டவர்கள் தங்கள் நூல்களில் சூரிய கிரகணம் பற்றி அறிவியல் பூர்வமான கருத்துகளை குறிப்பிட்டுள்ளனர்.
 
நிழல் விளையாட்டு
கிரகணங்கள் என்பவை நிழல் விளையாட்டுகள். எடுத்துக்காட்டாக வெயில் அடிக்கும்போது நாம் தலைக்குமேல் குடை பிடித்தால், குடை சூரியனை மறைக்கும். அதை நாம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பாக கூறலாம். இதைப் போல நிலவை மறைத்தால் அது சந்திர கிரகணம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட கிரகணத்தை நாசா புகைப்படம் எடுத்து அனுப்பியது. இதே போல் சூரிய மண்டலத்தில் இருக்கும் பல கோள்களிலும் துணைக்கோள்களிலும் இது நடப்பதுண்டு," என்றார் வெங்கடேஸ்வரன்.