1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (08:24 IST)

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்: கண்ணீர் விடும் முன்னாள் மாணவர்கள்

சென்னை ஐஐடியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் இறப்பு குறித்து ஆராய மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை ஐஐடி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
 
ஆனால் தொடர் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து பலரும் மீளவில்லை என்று ஐஐடி மாணவர்கள் கூறுகின்றனர்.
 
பல்வேறு சமூகச் சூழலில் இருந்து ஐஐடியில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஏன் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள், தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்களுக்கு உதவும் மையம் நடைமுறையில் செயல்படுகிறதா உள்ளிட்ட கேள்விகளை செயல்பாட்டாளர்கள் எழுப்புகின்றனர்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) ஆந்திராவை சேர்ந்த மாணவர் வைப்பு புஷ்பக் ஸ்ரீ சாய், சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
 
கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்டீபன் சன்னி என்ற ஆய்வு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
ஸ்டீபன் தற்கொலை செய்து கொண்ட அதே நாள் மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்று பிறகு காப்பாற்றப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் சென்னை கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இரண்டு மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து 'ஜிந்தாபாத்' என்ற அமைப்பைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் தொடரும் தற்கொலைகள் பற்றி கல்வி அமைச்சகம் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்று விமர்சிக்கின்றனர்.
 
''பாகுபாடுகள் வெளிப்படையாகத் தெரியும்''
 
சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலரிடம் பேசினோம். இரண்டு முன்னாள் மாணவர்கள் தங்களது அடையாளங்களை வெளியிட விரும்பாமல் பேசினார்கள்.
 
ஐஐடியில் சாதி, மத ரீதியான ஒடுக்குமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
சாதி, மத அடையாளங்களை ஒரு சில ஆதிக்க ஜாதி மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் குறிப்பிட்டு கேலி செய்வார்கள் என்கிறார்கள்.
 
''ஆதிக்க சாதி அல்லாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் ஆய்வுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைவு. நான் படித்த காலத்தில், மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தை பேராசிரியர் ஒருவர் கேலியாகப் பேசுவார்.
 
வகுப்பில் நான் சொல்லும் கருத்துகளுக்கு எந்த வரவேற்பும் இருக்காது. நாங்கள் படித்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வெளிப்படையாக பிரதமர் மோதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
 
சென்னை ஐஐடியில் மோசாமான முறையில் பாகுபாடு இருப்பதாக அவர் தெரிவித்தபோதும், எதுவும் மாறவில்லை. இறுதியில் அந்த பேராசிரியர் பணியில் இருந்து விலகிவிட்டார்,'' என்கிறார் அந்த முன்னாள் மாணவர்.
 
10 ஆண்டுகளில் 14 தற்கொலைகள்
 
2019இல் பாத்திமா லத்தீஃப் என்ற மாணவியின் தற்கொலை சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை ஐஐடியில் நிலவும் பாகுபாடுதான் அவரது இறப்புக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
 
பேராசிரியர் ஒருவர்தான் தற்கொலைக்கு காரணம் என பாத்திமா எழுதி வைத்திருந்ததாக பெற்றோர் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதும் அந்த பேராசிரியர் பணியில் நீடிப்பது எவ்வாறு சாத்தியமாகிறது என்று மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வினவுகின்றனர்.
 
பெயர் சொல்ல விரும்பாத மாணவர் ஒருவர், ''மாணவர் சன்னி இறந்துபோன அடுத்த நாள்தான் எங்களுக்கு தற்கொலை செய்து கொண்டது பற்றி தெரிய வந்தது. நாங்கள் போராட்டம் நடத்தினோம்.
 
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாத்திமா லத்தீஃப் மரணத்திலும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இங்கு நடைபெறும் தற்கொலைகள் ஒரு சில நாட்கள் செய்தியாகின்றன அவ்வளவுதான். சாதி, மத ரீதியான பாகுபாடு காரணமாக பல மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்று தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இங்கு எதுவும் மாறவில்லை,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
2019இல் நடந்த தற்கொலைக்கு பின்னர், தேசிய அளவிலான மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஆய்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தீர்மானம் அளித்த பிறகும், எந்த ஆய்வும் நடைபெறவில்லை என்று கூறுகிறார் அம்பேத்கர்-பெரியார் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்.
 
ஆனால் இந்த ஆய்வு நடைபெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆய்வு நடைபெறவில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத பேராசிரியர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்றும் தற்கொலை தடுப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்றும் பிபிசி தமிழ் கேட்டது. அதற்கு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று நமக்கு அளிக்கப்பட்டது.
 
"கொரோனா தொற்றுப் பேரிடர் காலத்திற்குப் பிந்தைய காலம் மிகவும் சவாலானதாக உள்ளது. மாணவர்களின் தற்கொலை என்பது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு.
தொடர்ந்து ஐஐடியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை ஐஐடியில் நிலவும் சூழல் என்ன?
 
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி வளாகங்களில் தொடரும் தற்கொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து, மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
 
அந்தக் குழுவில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லட்சுமி விஜயகுமார் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை சென்னை ஐஐடி வளாகத்தில் செயல்படுத்துகிறார்களா எனத் தெரியவில்லை என்று மருத்துவர் லட்சுமி கூறுகிறார்.
 
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்னேகா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆலோசனை மையம் உண்மையில் மாணவர்களுக்குப் பலன் தருகிறதா என்று சோதனை செய்யவேண்டும் என்கிறார்.
 
''சென்னை ஐஐடியில் ஆலோசனை மையம் இருந்தாலும், எங்கள் ஸ்னேகா உதவி எண்ணுக்கு இதற்கு முன்னர் மாணவர்கள் அழைத்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். ஆகவே வளாகத்தில் உள்ள மையத்தை அணுகுவதில் அவர்களுக்குச் சிக்கல்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்,'' என்கிறார் அவர்.
 
இந்தியாவில் உள்ள ஐஐடி வளாகங்களில் படிக்க வரும் மாணவர்களில் சிலர், பின்தங்கிய சமூகச் சூழலில் இருந்து வருகின்றனர். அங்கு சீட் பெறுவதற்காக மிகவும் கடினமாக உழைத்து மதிப்பெண்களை பெற்று வரும் மாணவர்கள், ஐஐடி படிப்பில் மேலும் அதிகமான போட்டியைச் சந்திக்கின்றனர் என்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது.
 
அதனால், மதிப்பெண் வழங்கும் முறைகளை மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படாதவாறு மாற்றி அமைக்க வேண்டும், ஆலோசனை மையத்திற்கான அணுகல் மிகவும் எளிதாகவும், எந்தவித அச்சமின்றி மாணவர்கள் சென்றுவரும்படி அமைக்கப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தது.
 
ஆனால் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் அங்கு நிலவும் சூழல் குறித்தும் உடனடியாக விரிவாக ஆராய்வதுதான் தீர்வாகும் என்றும் லட்சுமி கருதுகிறார்.
 
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீள கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
 
தமிழ்நாடு
 
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104
 
ஸ்னேகா தற்கொலை தடுப்பு மையம்: 0442464 0050, 04424640060
 
ஆந்திர பிரதேசம்
 
தற்கொலை தடுப்பு உதவி மையம்: 78930 78930
 
ரோஷிணி உதவி மையம்: 9166202000, 9127848584
 
கர்நாடகா
 
சாஹாய் உதவி அமைப்பு (24 மணி நேரம்): 080 65000111, 080 65000222
 
கேரளா
 
மைத்திரி: 0484 2540530
 
சைத்திரம்: 0484 2361161
 
தெலங்கானா
 
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104