புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (19:22 IST)

பிரசாந்த் பூஷண்: மன்னிப்பு கேட்க மறுப்பு, அவகாசம் கொடுத்த நீதிமன்றம் - என்ன நடந்தது?

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தண்டனையை அறிவிக்கும் முன்பாக தனது கருத்து குறித்து மறுபரிசீலனை செய்ய அவருக்கு இரண்டு, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்.

முன்னதாக, கடந்த 14ஆம் தேதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது தண்டனை மீதான வாதங்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தனது தீர்ப்பு தொடர்பான விளக்க மனுவை தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண், "நான் கருணை காட்டும்படி கேட்கவில்லை. பெருந்தன்மை காட்டும்படி கேட்கவில்லை. தண்டனை எதுவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்" என்று கூறியிருந்தார்.

மேலும், தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்ப்பை எதிர்த்து தாம் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தனக்கு தண்டனை அறிவிக்கக்கூடாது என்று பிரசாந்த் பூஷன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தண்டனை அறிவித்த பிறகுதான் தீர்ப்பு முழுமை பெறும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்த விசாரணையில், பிரசாந்த் பூஷண் சார்பில் வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் வரை தண்டனை இருக்காது என்று உறுதி தருகிறேன் என்றார் நீதிபதி அருண் மிஸ்ரா.

இந்த வழக்கின் பின்னணி பற்றி அறிய:

பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரச்சனை என்ன? - விரிவான தகவல்கள்

30 நாட்களுக்குள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் உரிமை எனக்குள்ளது என்றார் வழக்குரைஞர் துஷ்யந்த் தவே.

நீங்கள் எங்களிடம் சரியாக, நியாயமாக நடந்துகொள்ளாவிட்டாலும் நாங்கள் உங்களிடம் நியாயமாகவே நடந்துகொள்வோம் (We will be fair to you, weather or not you are fair to us) என்று குறிப்பிட்டார் நீதிபதி அருண் மிஸ்ரா.

"தண்டனையைத் தள்ளி வையுங்கள்- வானம் ஒன்றும் இடிந்து விழாது"

குற்றவாளி என்று தீர்ப்புரைத்தலும் தண்டனை வழங்குவதும் இரண்டு தனித்தனியான விஷயங்கள் என்று வாதிட்ட துஷ்யந்த் தவே, மறு சீராய்வு செய்வதற்கான எனது முறையீடு மிகவும் சரியானது, தண்டனை வழங்குவது தள்ளிவைக்கப்படலாம் என்று குறிப்பிட்டார். அப்படி தண்டனையைத் தள்ளிவைப்பதால் வானம் ஏதும் இடிந்துவிழாது என்றும் குறிப்பிட்டார் வழக்குரைஞர் தவே.

ஆனால், நீதிபதி அருண் மிஸ்ரா இன்னும் 12 நாள்களில் அதாவது செப்டம்பர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் என் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதற்காக நான் வேதனைப் படுகிறேன். இந்த வேதனை எனக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதற்காக அல்ல. நான் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக" என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார் பிரசாந்த் பூஷண்.

"ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று கருதுகிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவுகள் என்னுடைய கடமையை நிறைவேற்றும் முயற்சிகளே. அமைப்பு மேம்படுவதற்காகப் பணியாற்றும் முயற்சி என்றே என்னுடைய ட்வீட்டுகள் பார்க்கப்படவேண்டும்" என்று வாதிட்டார் பிரசாந்த் பூஷண்.

"நீதித்துறையில் ஊழல் நடந்தால் எப்படி அம்பலப்படுத்துவது?"

இந்த விவாதத்தில் பங்கேற்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், "நீதித்துறையில் ஊழல் நடந்தால் அதை எப்படி அம்பலப்படுத்துவது?" என்று கேட்டார்.

தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே-வுக்கு முன்னால் அந்தப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றி நான் அதிகம் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், குற்றத்தின் இயல்பு, அது எப்படிப்பட்டது என்பது பார்க்கப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளின் நோக்கத்தை விமர்சிப்பது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இந்தப் பின்னணியிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடக்கிறது. ஆனால், நீதிபதிகளின் நோக்கத்தை விமர்சிக்கும்போது அதில் உண்மை இருந்தால், நோக்கத்தை விமர்சிப்பவர்களுக்கு அது சட்டத்தில் இருந்து தற்காப்பை வழங்குவதாக நீண்டகாலமாக பலர் வாதிடுகின்றனர்.

பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வாதிட்ட வழக்குரைஞர் ராஜீவ் தவானும் இதே வாதத்தை முன்வைத்தார்.

"ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(2)ன்படி ஒருவரது குற்றச்சாட்டில் உள்ள உண்மை குற்றம்சாட்டுகிறவருக்கு சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது" என்று வாதிட்டார் ராஜீவ் தவான்.

"இது பாதுகாப்பா? தீங்கு விளைவிப்பதா?" என்று கேட்டார் நீதிபதி அருண் மிஸ்ரா.

தாம் பேசியது குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு திரும்பி வருவதற்கு பிரசாந்த் பூஷணுக்கு 2-3 நாள்கள் அவகாசம் தரலாமா என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டார் அருண் மிஸ்ரா.

தண்டனை வழங்கும் விவகாரத்தில் தீவிரமான எச்சரிக்கை கடைபிடிக்கப்படவேண்டும் என்று வாதிட்ட வழக்குரைஞர் தவான், உண்மை என்ற லட்சுமண ரேகையை அகற்றிவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இன்றைய விசாரணையில் மூத்த வழக்குரைஞர்களுக்கும், நீதிபதிக்கும் இடையே இன்று காத்திரமான விவாதம் நடைபெற்றது. முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டன. இறுதியில் தாம் கூறிய கருத்துகள் குறித்து சிந்தித்துவிட்டு வருவதற்கு 2-3 நாள்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதுவரை தீர்ப்பை ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி அருண் மிஸ்ரா அறிவித்தார்.