வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (10:43 IST)

எறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாமா?

நல்ல தோற்றமும், மொறு மொறுவென்ற சுவையும் உள்ள, நன்கு விரிந்த பின்பகுதி கொண்ட எறும்புகளுக்கு கொலம்பியாவில் உணவை அலங்கரிக்கும் பொருள் என்ற வகையில் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால், அதுபோன்ற எறும்பை பிடிப்பதற்கு, நீங்கள் ஆயிரக்கணக்கான சிப்பாய் எறும்புகளை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கொலம்பியாவில் ஆண்டிஸ் மலைத் தொடரில் காலனி ஆதிக்க காலத்தைச் சேர்ந்த பரிச்சரா என்ற நகரில் ஓர் ஆண்டில் முக்கியமான நாள் என்பது கிறிஸ்துமஸ் நாளோ, புத்தாண்டோ அல்லது ஈஸ்டரோ கிடையாது. `The Exit' என அவர்கள் குறிப்பிடும் நாள் தான் வருடத்தின் முக்கியமான நாளாக அவர்களுக்கு உள்ளது.

அந்த நாள் நெருங்கும் போது கூழாங்கற்கள் பதித்த தெருக்களையும், வெள்ளையடித்த கட்டடங்களையும் கொண்ட பரிச்சரா நகரில் ஒருவிதமான எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளும். தெருவை சுத்தம் செய்பவர்கள், வீடுகளை சுத்தம் செய்பவர்கள் இடையிலேயே வேலையை நிறுத்துவிடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியே வந்து விடுவார்கள். கடைக்காரர்கள் திடீரென தடயமே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.


ஹோர்மிகஸ் குலோனஸ் அல்லது ``பின்புறம் பெருத்த'' மதிப்புமிக்க எறும்புகளைத்தான் அவர்கள் அனைவரும் தேடுவார்கள். கொலம்பியாவில் வடமேற்கு சன்டன்டெர் பகுதியில் உணவை அலங்கரிக்க சேர்க்கப்படும் சிறந்த உணவாக இந்த பின்புறம் பெருத்த எறும்புகள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு இளவேனில் காலத்திலும், கொலம்பியாவில் நாட்டுப்புறப் பகுதியில், இந்த வகையான - பின்புறம் பெருத்த எறும்புகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்படுவதால், இந்தக் காலத்தில் வருடாந்திர அறுவடை போக்கு உருவாகிவிடுகிறது.


``முதலில் வருபவருக்கு, முதலில் அளிப்பது என்பது தான் நடைமுறையாக உள்ளது'' என்று 2000வது ஆண்டில் பரிச்சரா நகரில் குடியேறிய முன்னாள் உளவியல் நிபுணரான இப்போதைய சமையலர் மார்கரிடா ஹிகுவேரா கூறினார். ``உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எறும்புகளுக்காக நீங்கள் விரித்த வலையில் ஒரு பக்கெட் அளவுக்கு எறும்புகள் கிடைத்தாலும் அது உங்களுக்குச் சொந்தமானது தான்'' என்று அவர் விவரித்தார்.



ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இது நடைபெறும். கன மழைக் காலம் முடிந்து, வெயில் தொடங்கும் நிலையில், முழு நிலவு நாளில், The Exit நாள் கடைபிடிக்கப்படுவது, எறும்புகள் இனச் சேர்க்கை காலத்தைக் குறிப்பதாக இருக்கும். அது இரண்டு மாத காலம் வரை நீடிக்கும். ராணி எறும்புகளை தங்கள் முடிந்த வரை அதிக அளவில் சேகரிக்க, அந்த நாட்களில் உள்ளூர் மக்கள் முண்டியடித்துக் கொண்டு செயலில் இறங்குகிறார்கள். முட்டைகள் நிரம்பி, இனப் பெருக்கத்துக்குத் தயாரான நிலையில் இருக்கும், பிரவுன் நிறத்தில், கரப்பான் பூச்சி அளவில் இருக்கும் ராணி எறும்புகள், வேர்க்கடலை வடிவிலான உருண்டையான பின்புறம் கொண்டதாக இவை இருக்கும். அவற்றை உப்பு போட்டு வறுத்தால், வேர்க்கடலை, பாப்கார்ன் அல்லது மொறு மொறுப்பான பன்றி இறைச்சியைப் போன்ற ருசியைத் தருவதாகக் கருதுகிறார்கள்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை!

ராணி எறும்புகளின் இறக்கைகளை நீக்கி, சமையலறை மேசை மீது சிறிய பாத்திரத்தில் போட்டுக் கொண்டே நம்மிடம் பேசிய ஹிகுவேரா, ``என்னைப் பொருத்த வரையில், அதன் நறுமணம் தனித்துவமானது'' என்று கூறினார். ``இது என் கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறது. ஒரு பேரல் நிறைய ராணி எறும்புகளை என் தாத்தா ஒரு முறை வாங்கி வந்தது நினைவிருக்கிறது. உள்ளே அவை சப்தம் எழுப்பிக் கொண்டு, ஊர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றாக அவற்றை சமைப்பதற்கு தயார்படுத்த, குடும்பத்தில் அனைவருமே உட்கார்ந்து வேலை செய்தோம்'' என்றார் அவர்.

ராணி எறும்புகள் தெருவோரக் கடைகளில் நறுமணம் மிக்க, ருசியான, தீனியாக விற்கப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தும் ஸ்டவ் அடுப்புகளை வைத்து வறுத்து தருகின்றனர். கொலம்பியாவில் உயர் தர உணவகங்களில் உள்ளதைப் போன்ற மெனுவுடன் இவை விற்கப் படுகின்றன. உண்மையில், ஒரு கிலோ ராணி எறும்பு 3 லட்சம் பெசோக்கள் (65 பவுண்ட்கள்) வரை வருமானத்தை ஈட்டித் தரும். உலகப் புகழ் பெற்ற காபியின் மூலம் கிடைக்கும் பணத்தைவிட இது பல மடங்கு அதிகம். அது மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கு வருவாய்க்கான பெரிய வாய்ப்பாக இது உள்ளது.

``சாதாரணமாக ஒரு வாரத்தில் ஈட்டும் வருவாயை, இந்த எறும்புகளை சேகரிப்பதன் மூலம், ஒரே நாளில் சம்பாதித்துவிடுவேன்'' என்று பரிச்சராவில் தெருக்களை சுத்தம் செய்யும் தொழிலாளி பெடெரிக்கோ பெட்ரஜா கூறினார். ``ஆனால் அது கடினமான வேலை. தங்களுடைய ராணி எறும்புகளை எளிதில் நீங்கள் பிடித்துச் செல்ல காலனிவாசிகள் அனுமதித்துவிட மாட்டார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.


இவற்றை சேகரிப்பவர்கள், கணுக்கால் வரையில் ரப்பர் பூட்ஸ் மற்றும் நீண்ட கையுறைகளை பாதுகாப்புக்காக அணிந்து கொண்டு, வேகமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் ராணி எறும்புகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிப்பாய் எறும்புகள் மிகுந்த வலியை ஏற்படுத்தும் அளவுக்குக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சிவிடும் ஆபத்து இருக்கிறது. வயல்வெளிகளில் பரவலாக இறங்கும் கிராமத்து மக்கள் கையில் கிடைத்த பொருட்களில் - பைகள், பாத்திரங்கள், பானைகள், சாக்குப் பைகள் - என பலவற்றில் ராணி எறும்புகளை பிடித்து போட்டுக் கொள்கிறார்கள். பகல் முழுக்க இந்த வேலையை அவர்கள் செய்கின்றனர். ஆனால் இதற்கு கணிசமான வெகுமதி கிடைக்கும், குறிப்பாக இதை சாப்பிடுபவர்களுக்கு நல்ல பரிசாக அமையும்.

இது புரதச்சத்து மிகுந்ததாக இருக்கிறது. இலைகளை துண்டாக்கும் தெற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ராணி எறும்புகள், உயர் கொழுப்புச் சத்து சேர்மானத்தைத் தடுக்க உதவும் செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலங்கள் மிகுந்ததாக உள்ளன. எறும்புகளில் நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிக அளவில் இருப்பதாக சஞ்சிகையில் வெளியான மற்ற கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வப்போது இதைச் சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

``அதனால் தான் பரிச்சரா பகுதி மக்கள் நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்'' என்று அங்கு கடை வைத்திருக்கும் செசிலியா கோன்ஜாலெஜ்-குவின்டெரோ கூறினார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக கண்ணாடிக் குடுவைகளில் எறும்புகளை விற்பனை செய்து வருகிறார். ``எறும்புகள் எங்களுக்கு விசேஷ பலம் தருகின்றன - குறிப்பாக பின்புறம் பெருத்த எறும்புகள் அதிக பலத்தைத் தருகின்றன'' என்றார் அவர்.

இந்த வகை எறும்புகளை சன்டன்டெர் பகுதி மக்கள் சுமார் 1,400 ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். கொலம்பியாவில், குவானே மக்கள் 7வது நூற்றாண்டில் பிடித்து, சமைக்கத் தொடங்கியதாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. எறும்புகளின் இடுக்கி போன்ற கால்களை, காயங்களைக் குணப்படுத்துவதற்கு தைப்பதற்காக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அந்த வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. பிற்காலத்தில் ஸ்பானிய கொள்ளையர்கள் அதை சாப்பிடும் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றனர்.

'அதனால்தான் பரிச்சரா பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்கிறோம்'

அநேகமாக அவை பிடிக்கப்படும் காலக்கட்டம் - இனப்பெருக்க காலமாக இருப்பதால் - இந்த எறும்புகள் பாலுணர்வைத் தூண்டுபவையாகக் கருதப்படுகின்றன. திருமண பரிசாக பீங்கான் குடுவைகளில் வைத்து பரிசாகவும் அளிக்கப்படுகின்றன. ஆண்டிஸ் மலைப் பகுதியில் ``மஞ்சள் பாதம்'' கொண்ட மக்கள் எனப்படும் பிரிவினரிடம் இந்த வழக்கம் இயல்பாகக் காணப்படுகிறது. அவர்கள் நடந்து செல்லும் நிலம் ஆரஞ்சு-மஞ்சள் நிறம் கொண்டதாக இருப்பதாலும், தங்களின் பாரம்பரியமான வீடுகளை அந்த மண்ணைக் கொண்டு கட்டுவதாலும் மஞ்சள் பாதம் கொண்டவர்கள் என அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

அருகில் உள்ள புகாராமங்கா நகரில், இந்த எறும்புகளின் நினைவாக உலோக நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் சுவர்களில் இவற்றின் வண்ணமயமான ஓவியங்களைக் காண முடிகிறது. வறுத்த, மொறு மொறுப்பான இந்த எறும்புகளை நொறுக்கு தீனியாக சாப்பிட டாக்சி டிரைவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். குழந்தைகள் சிறிய, புசுபுசுவென்ற எறும்பு பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர்.

சமீப ஆண்டுகளாக இந்த எறும்பு உணவுக்கு மோகம் அதிகரித்துள்ளதால், வட்டார உணவு என்ற நிலையில் இருந்து உணவு சுவை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படும் உணவாக இது மாறியுள்ளது. ஒவ்வொரு இளவேனில் காலத்திலும், ராணி எறும்புகளை பிடித்து லாரிகளில் கொலம்பியா முழுக்க அனுப்பி வருகிறார்கள். நாட்டின் தலைநகரான பகோட்டா நகரிலும் மினிமால் போன்ற உயர் தர உணவகங்களிலும் சீசன் உணவாக இது பரிமாறப்படுகிறது. அமேசான் வகை மீன் உணவுடன் அல்லது ரோஸ்ட் செய்த மாட்டிறைச்சியுடன் கருமிளகு சாஸ் என்ற வகையில் இது அளிக்கப்படுகிறது.

``கொலம்பிய உணவு வகையில் இந்த எறும்புகள் முக்கிய இடம் பெறுகின்றன'' என்று அந்த உணவகத்தின் சமையலர் எட்வர்டோ மார்ட்டினெஜ் தெரிவித்தார். தனக்கு 9 வயதாக இருந்தபோது சன்டன்டெர் சென்ற சமயத்தில் முதன்முறையாக இதை அவர் ருசித்திருக்கிறார். ``இதன் பயன்பாட்டை ஊக்குவிக்க நான் விரும்புகிறேன். இந்த பாரம்பரியம் நீடித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்'' என்கிறார் அவர்.

ஆனால், சமீபத்திய தலைமுறைகளில், வனப் பகுதிகள் அழிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எறும்புகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. அதிக இனப்பெருக்கம் காரணமாக அவை அடித்தளங்களில் துளையிட்டு செல்கின்றன. இலைகளை துண்டாக்கும் குணம் கொண்ட வகையைச் சேர்ந்த எறும்புகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும், பருவநிலை மாறுதல்கள் காரணமாக எறும்புகளின் இனப்பெருக்க சுழற்சியும் மாறிவிட்டது. அந்தப் பகுதியின் ஈரப்பதம், சூரிய வெப்பம் மற்றும் மழைப் பொழிவு ஆகியவை பெருமளவில் மாறிவிட்டன. குறிப்பிட்ட வானிலை சூழ்நிலையில் தான் இனச்சேர்க்கை காலம் அமைகிறது என்பதால், தரைப் பகுதி மென்மையாக இல்லாமல் போனால், பூமிக்கு அடியில் உள்ள துளைகளில் இருந்து ராணி எறும்புகள் எளிதாக வெளியே வர முடியாமல் போகலாம். அதேபோல காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல் ஆகியவை எறும்புகளின் இயல்பான வாழ்விடங்களை அழிப்பதாக உள்ளன. அதனால் எறும்புகளின் புற்றுகள் அமைவதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன.

``சூழலியல் மாறிக் கொண்டிருக்கிறது'' என்று புகாரமங்காவை சேர்ந்த சுயேச்சை ஆராய்ச்சியாளர் ஆரா ஜூடிட் குவாட்ரோஸ் கூறினார். பெருமளவில் உணவாகப் பயன்படுத்துவதற்காக, நீடித்த நோக்கில் எறும்புகளை இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். ``சரியான சூழ்நிலைகள் அமையாமல் போனால், எறும்புகள் பிறக்காமல் போகலாம் அல்லது மண்ணில் இருந்து வெளியே வர முடியாமல் போகலாம்'' என்று அவர் கூறுகிறார்.

பரிச்சராவின் அடிவாரப் பகுதியில் தொடங்கி, சான் கில், கியூரிட்டி, வில்லானுவா, குவானே நகரங்களைச் சுற்றிய பள்ளத்தாக்குப் பகுதிகள் வரையில் இவை கிடைக்கின்றன. அதனால் இவை அழிந்து போய்விடக்கூடிய பிரச்சினை இன்னும் பெரிய கவலையை ஏற்படுத்தவில்லை.

அந்தப் பகுதியைச் சேர்ந்த வழிகாட்டியும், எறும்புகள் நிபுணருமான அலெக்ஸ் ஜிமெனெஜ் என்பவரை நான் சந்தித்தபோது, நீளமான மரக் குச்சி வைத்து எறும்பு வளையை தோண்டிக் கொண்டிருந்தார். உடனே ஆயிரக்கணக்கான சிப்பாய் எறும்புகள் வெளியே வந்து, புதிதாக என்ன இடையூறு நேர்கிறது என நோட்டமிட்டன. ஒவ்வொரு வளையிலும் பல்லாயிரக்கணக்கான சிப்பாய் எறும்புகள் இருக்கும் என்று ஜிமெனெஜ் தெரிவித்தார். இந்த வளையை நேராக்கி வைத்தால் அது பல மைல்கள் தூரம் வரை செல்லும். அந்த அளவுக்கு அமைந்துள்ள வளைகளில் 5 மில்லியன் வரையிலான சிப்பாய் எறும்புகள் இருக்கும் என்கிறார். அந்த வளையின் ராணி எறும்பு 15 ஆண்டுகள் வரை வாழும் என்பது ஆச்சர்யம் தரும் தகவலாக உள்ளது. அந்த ராணி எறும்பு சாகும்போது, மற்ற எறும்புகள் வெளியேறி, புதிய வளையை உருவாக்க வேண்டும்.

``இயற்கையாகவே இந்த எறும்புகளுக்கு சிறிதளவு புத்திசாலித்தனம் உண்டு'' என்கிறார் ஜிமெனெஜ். துண்டித்த இலைகளை தங்களுடைய சிறிய வயிற்றின் மீது எடுத்துச் செல்லும், இலைவெட்டி எறும்புகள் செல்லும் பாதையை பார்த்தபடி அவர் பேசினார். ``அவை எல்லாம் சேர்ந்து வாழ்வதை உறுதி செய்வதற்கு, அவை ஒன்றாக உழைக்கி்றன. பல நூறு ஆண்டுகளாக அவற்றை சேகரித்து சாப்பிட்டு வருகிறார்கள். அவை முற்றிலுமாக இறந்துவிடவில்லை'' என அதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.

இதை நிரூபிப்பதைப் போல, இவற்றின் இனச் சேர்க்கை காலத்தில் சன்டன்டெர் பகுதிவாசி ஒருவர் கடந்த ஆண்டு 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை அவர் குறிப்பிட்டார். சைக்கிளில் அந்தப் பகுதி வழியே செல்வதற்கு சாதாரணமாக 30 நிமிடங்கள் ஆகும். ஆனால் எறும்புகள் அதிகம் காணப்பட்டதால், சில நிமிடங்களுக்கு ஒரு முறை நிறுத்தி, நிறைய எறும்புகளை சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் இந்தப் பயணத்துக்கு சுமார் 4 மணி நேரம் ஆனது. மலை அடிவாரத்தில் கிராம மக்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர். கொலம்பியா மற்றும் கொலம்பியாவுக்கு முந்தைய பாரம்பர்ய காலத்து வழக்கத்தின்படி எறும்புகளை சேகரிப்பதில் அனைவருமே ஆர்வம் காட்டினர் என அவர் விவரித்தார்.

``மொத்த நகரமே அன்றைய நாள் இரவில் இந்த எறும்புகளை சமைத்த வாசனையால் நிறைந்திருந்தது'' என அவர் வியப்புடன் கூறினார். எல்லா இடங்களிலும் இந்த எறும்பை சமைத்து சாப்பிட்டார்கள் என்றார் அவர்.