வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (09:50 IST)

எலி சைசில் ஒரு யானை - 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த விலங்கு பற்றி செய்தி வருகிறது தெரியுமா? மிகச்சிறிய பாலூட்டி விலங்கான இந்த குட்டி யானை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் ஹெலன் பிரிக்ஸ் எழுதியுல்ள செய்தி:

யானை மூஞ்சூறு என்று அழைக்கப்படும் இந்த விலங்கு ஒன்றினை, ஆப்பிரிக்க நாடானா ஜிபூட்டியில் அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் ஒன்றின்போது தற்போது பார்த்துள்ளார்கள்.

யானை மூஞ்சூறுவை கடைசியாக 1970ல் பார்த்ததாக அறிவியல் பதிவு உள்ளது. அவ்வளவுதான். பிறகு அதைக் காணவே இல்லை.

பெயரில் யானையும், மூஞ்சூறும் இருந்தாலும் இது யானையும் அல்ல. மூஞ்சூறும் அல்ல. எனினும், இவற்றுக்கும் aardvark என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆப்பிரிக்க எறும்புத் தின்னிகள், யானைகள் மற்றும் மனாடீ (manatee) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாலூட்டி வகை விலங்குகள் ஆகியவற்றுக்கும் உறவு உள்ளது.

சோமாலி செஞ்ஜி என்றும் இவை அழைக்கப்படும். முன்பு ஒரு காலத்தில் இவை சோமாலியாவில் மட்டுமே காணப்பட்டன.


நீண்ட கூரிய முகத்தைப் பயன்படுத்தி இந்த யானை மூஞ்சூறுகள் பூச்சிகளைப் பிடித்து திண்ணும்.

தற்போது ஜிபூட்டியில் வறண்ட, பாறைகள் நிறைந்த பகுதியில் யானை மூஞ்சூறுகள் பிடிபட்டுள்ளன.

விவசாயமோ, மனித நடமாட்டமோ இல்லாத இடத்தில் இவை கண்டறியப்பட்டுள்ளதால் இந்த இனத்துக்கு பெரிதாக பாதிப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எத்தியோப்பியாவிலும் யானை மூஞ்சூறுகள் இருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.