செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (13:12 IST)

பசியின் வலியை தோற்கடித்து தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி

மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 12ஆம் வகுப்பு தேர்வில் 500/600 மதிப்பெண்கள் வாங்கி, அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஒரு இடத்தில் தங்குவது என நாடோடி சமூகமாக உள்ளனர்.

குறி சொல்லுவதற்காக பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த தெய்வானை, படிப்பிலும் அதிக ஈடுபாடுடன் இருந்ததால், திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

''என் சமூகத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலை செய்வது என் கனவு. என் சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்,'' என்கிறார் தெய்வானை.


பெற்றோர் கணேசன், லட்சுமியின் தொழிலை மதிக்கும் தெய்வானை, ''எங்கள் வசிப்பிடத்தில், ஒரு கூட்டமாக நாங்கள் வாழ்கிறோம். என் பெற்றோர் மட்டுமல்ல,என் சொந்தங்களும் எனக்கு உற்சாகம் அளித்தார்கள். நாங்கள் தற்காலிக குடில் அமைத்து வசிப்பதால், மின்சார வசதி கிடையாது. ஆனால் தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற உறுதி இருந்தது. குலத்தொழிலுக்காகப் பெற்றோருடன் பல இடங்களுக்குச் சென்றாலும், கல்வியை தொடர்வதில் அக்கறையோடு இருந்ததால், வென்றேன்,''என்கிறார் தெய்வானை.

ஒய்வு நேரங்களில் கூடைகள் முடைந்து தனது படிப்பு செலவுக்கு காசு சேர்த்திருக்கிறார் தெய்வானை. ''நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்பதுதான் என் சமூகத்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம். குறி சொல்லுவதில் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் சொற்பம்தான். அதனால் பசியின் வலி தெரியும். பல ஊர்களுக்கு பசியோடு நடந்து சென்றிருக்கிறேன். நான் படிக்கும் படிப்பு என்னை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் படித்தேன்,''என்கிறார் தெய்வானை.


தெய்வானையின் தேர்ச்சி குறித்து பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளப்போவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''தெய்வானை போன்ற பெண் குழந்தைகளை ஊக்குவிக்கவேண்டும். மாணவியின் கல்லூரி செலவை நான் செலுத்துவேன். அதோடு அவருக்கு மேலும் பலர் உதவி செய்ய,அந்த மாணவியின் பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி வைக்கவுள்ளேன். அவரை வெற்றியாளராக பார்க்க அவர் சமூகத்தோடு நான் காத்திருக்கிறேன்,''என்றார் சரவணன்.