வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (09:41 IST)

செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பூமியிலிருந்து ரோபோட்டிக் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும். சுமார் 40 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் இதைத் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளத்தில் ஒரு காலத்தில் கணிசமான அளவில் நீரோட்டம் இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

செவ்வாயில் தரையிறங்கிய பின்பு ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது செவ்வாயின் பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் சேகரிக்கும். அந்த மாதிரிகள் இந்த தசாப்தத்தின் இறுதிப் பகுதியில் பூமியை வந்தடையும்.

இதில் உள்ள 23 கேமராக்கள் செவ்வாயில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்பதை அறிய உதவும். எனினும், பெர்சவரன்ஸ் கண்டுபிடிக்கும் முடிவுகளின் துல்லியத்தன்மை பூமியில் உறுதிசெய்யப்படும்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் செவ்வாயை நோக்கி விண்கலங்களை செலுத்தியுள்ளன.

கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.