திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (10:30 IST)

இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

Sri Lanka
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்றுநாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.


இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிகள் இன்றைய தினம் முதல் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றிரவு முதல் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தன. அத்துடன், நாட்டில் டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலும் எதிர்வரும் 12ம் தேதி வரை பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.