1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (14:33 IST)

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு!

இலங்கையில் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 
நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை பார்க்க முடிகின்றது. நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
 
இலங்கைக்கு தேவையான பெட்ரோல் போதுமான அளவு தம்வசம் காணப்படுகின்ற போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெட்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
 
எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், டீசலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏனைய மின்உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வாகனங்களுக்கு டீசலை வழங்குவதை விடவும், மின்சார உற்பத்தியை மேற்கொள்வது அவசியம் என கொள்கை அளவில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பெருமளவிலான டீசல் மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் 11ம் தேதியே நாட்டை வந்தடையும் என அவர் கூறுகின்றார். இதனால், நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது சந்தைக்கு 1000 முதல் 1500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.