ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (21:15 IST)

இலங்கையில் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள்: முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு

Srilanka
இலங்கையில் கடந்த 30வருட காலமாக அடையாளம் காணப்பட்ட சுமார் 20 மனிதப் புதைக்குழிகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பல்வேறு காலப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களின் போது, பாரிய மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதைக்குழிகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
 
இந்த புதைக்குழிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்கள், தனது கடமையை சரிவர முன்னெடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
 
''உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளது.
 
குடும்பங்களின் வழக்கறிஞர்கள் புதைக்குழிகள் உள்ள இடங்களுக்கு போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை.
 
யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்த ஒரு சில அரிதான வழக்குகளிலும் அந்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழி
யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் துரையப்பா விளையாட்டு அரங்கம், செம்மணி மனிதப் புதைக்குழி, மிருசுவில் மனிதப் புதைக்குழி என மூன்று மனிதப் புதைக்குழி இடங்கள் காணப்படுகின்றன.
 
அதேபோல் கணேசபுரம் மனிதப் புதைக்குழி (கிளிநொச்சி), புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி (முல்லைத் தீவு), திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி (மன்னார்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இருக்கின்றன.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகள் தவிர., குருநாகல், கம்பஹா, கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் இந்த மனிதப் புதைக்குழிகள் காணப்படுகின்றன.
 
இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் வன்முறைகளின் போது பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
 
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களே இந்த புதைக்குழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது.
 
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் சடலங்களை கொண்ட பாரிய மனிதப் புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கிலாவது இலங்கையில் காணப்படுகின்றது என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.
 
இவ்வாறான மனிதப் புதைக்குழிகளில் 20 புதைக்குழிகளில் மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.
 
1983 - 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் அகழ்வுப் பணிகள் வெளிகொண்டு வருகின்றன என அதில் கூறப்படுகின்றது.
 
அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ளதை போன்று ஏனைய பாரிய மனிதப் புதைக்குழிகள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மக்களின் இன்னமும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய எலும்புக் கூடுகளின் எச்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையால் ஒரு சில மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், காணாமல் போனதற்கு பொறுப்பானவர்களில் சிலர் மாத்திரமே நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
''மனிதப் புதைகுழிகள் தொடர்பில், மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதை பணிக்குழு கருத்தில் கொள்கின்றது.
 
எனினும், மாத்தளை புதைக்குழி மீதான மீள் விசாரணை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், ஏனைய சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழிகள் அமைந்துள்ள இடங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டவில்லை என்பது தொடர்பிலும், சில புதைகுழிகள் அமைந்துள்ள இடங்களில் நடைபெற்ற கட்டடப் பணிகளின்போதும், இதர நடவடிக்கைகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட மிகமுக்கியமான ஆதாரங்கள் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று வெளிவந்த தகவல்கள் தொடர்பிலும் கவலையடைந்துள்ளது.
 
காணாமல் ஆக்கப்பட்ட சிலரது இருப்பிடங்களை அறிந்து கொள்வதற்கு இவை முக்கியமான திறவுகோலாக இருக்கலாம் என்பதால், புதைகுழிகள் இருப்பதற்குச் சாத்தியமான இடங்களைக் கண்டறிவது பற்றிய முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்படி இப்பணிக்குழு அழைப்பு விடுக்கின்றது.
 
இதுவிடயத்தில், சாத்தியமான இதர புதைகுழிகளின் அமைவிடங்கள் பற்றி விசாரணை செய்வதற்கு அது பற்றி திறன்கொண்ட சிறப்பு அணியொன்றை உருவாக்க வேண்டும் என்றும், தடயவியல் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தனது பரிந்துரையினை வலியுறுத்துகின்றது." என இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூறியுள்ளன.
 
கோப்புக்களை அழிக்குமாறு உத்தரவு
''அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக, (1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாகவும் இருந்த) அப்போதைய பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஸ மாத்தளையில் நடந்த அகழ்வுப் பணிகளில் கொண்டிருந்த தலையீட்டை குறிப்பிடலாம்."
 
"மாத்தளை மாவட்டம் உள்ளடங்கும் மத்திய மாகாணத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த, ஐந்து வருடத்திற்கு முந்தைய சகல பதிவுகளையும் கோப்புக்களையும் அழித்து விடும்படி உத்தரவிட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டுகின்றது." எனவும் அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் எந்தவித பயனும் கிடைக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல மனித புதைக்குழிகள் அகழப்பட்ட போதிலும், அந்த அகழ்வுகளின் ஊடாக இந்த புதைக்குழிகளுக்கு காரணமானவர்கள் எவரும் நீதிக்கு முன் கொண்டு வரப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
''மூன்று 'மண்டல' ஆணைக்குழுக்களிலும் 27,526 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், இவற்றில் அவர்களுக்கு கிடைத்த நேரத்தில் ஆய்வுசெய்தவற்றில் 16,742 முறைப்பாடுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதுடன் தொடர்புடையவை என்று தீர்மானித்தன.
 
85 எஞ்சிய முறைப்பாடுகள் மீது விசாரணைகளை மேற்கொண்ட அகில இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காணாமல் போனதுடன் தொடர்புடைய மேலும் 10,136 முறைப்பாடுகளைப் பதிவுசெய்தது.
 
86 வேறுவிதத்தில் சொல்வதாக இருந்தால், ஏறத்தாழ 27,000 காணாமல்போதல் சம்பவங்களை 1990களின் இறுதியில் இவ்ஆணைக்குழுக்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
 
மேலே கூறியது போன்று, அதற்குப் பின்னர் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அதுவும் குறிப்பாக பாதுகாப்புப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த போரில், காணாமல் போயுள்ளனர்." என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
''கணக்காய்வு ஆண்டின் முடிவில் காணாமல் போன ஆட்கள் தொடர்பில் 39,473 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும், இன்றுவரை வெறும் 67 இடைக்கால அறிக்கைகளே வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.
 
கிடைக்கப்பட்ட இவ்வாறான முறைப்பாடுகளில், 21,171 முறைப்பாடுகள் மட்டுமே கோப்புக்களில் பராமரிக்கப்பட்டு வருவதுடன், 702 குடும்பங்கள் மட்டுமே விசாரணைச் செயற்பாடுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளன.
 
இது மொத்தமாகப் பராமரிக்கப்பட்டுவரும் கோப்புக்களில் ஒப்பீட்டளவில் வெறும் 3.32 வீதத்திற்கும் குறைந்த முன்னேற்றத்தையே எட்டியுள்ளது." என கூறப்படுகின்றது.
 
சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை
 
யாழ்ப்பாணத்தின் மிருசுவில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலங்களை தவிர, வேறு எந்தவொரு உடலும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என அந்த ஆய்வுகளை நடத்திய குழுவினர் கூறுகின்றனர்.
 
யாழ்ப்பாணம் - செம்மணியில் ஆடைகளை வைத்து, அடையாளம் காணப்பட்ட இரண்டு உடல்கள் கூட, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டு, அடையாளம் காணப்படுகின்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனைப் பணிக்குழு வலியுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உறவுகளை தேடும் உறவுகளும் இறக்கின்றார்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், வயது முதிர்வு அல்லது உடல்நலம் குன்றி தொடர்ச்சியாக மரணடைந்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் மன்னார் மாவட்ட தலைவர் மனுவேல் உதயச்சந்திராவை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன்படி, இன்று வரை 178 தாய்மார் உயிரிழந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
''இவ்வாறாக இக்குற்றச் செயல்களில் வாழும் சாட்சிகள் எங்கள் மத்தியிலிருந்து படிப்படியாக மறைந்துகொண்டு வருகின்றன. நாமும் இறந்து போனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
 
நீதி எப்போது கிடைக்கும் என தெரியாமல், வீதிகளில் இறங்கித் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு நீதிக்காக போராடி வருகின்றோம்" என மனுவேல் உதயச்சந்திரா கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நான்கு அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கையை தாம் முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
 
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.
 
''நாம் இதனை நிராகரிக்கின்றோம். மிகவும் தெளிவாக கூறுகின்றோம். பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.
 
 
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், வழக்குகளின் தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
''1994ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் தேடிக் கொள்ளக்கூடியதாக இருந்த வழக்கு விசாரணை அறிக்கைகள், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் அந்தந்த பிரதேசங்களில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
இந்த சம்பவங்கள் தொடர்பிலான உண்மையை வெளிகொணர்வதன் ஊடாக, அரசாங்கம் இதிலிருந்து விடுப்பட முடியும் என பிரிட்டோ பெர்ணான்டோ குறிப்பிடுகின்றார்.
 
ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் காலத்தில் மாத்திரம் சுமார் 700 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த தகவல்களை தாம் கூறவில்லை என தெரிவித்த அவர், இது ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலேயே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.