திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (21:45 IST)

பிரதமர் மோதி ஜில் பைடனுக்கு பரிசளித்த 'செயற்கை வைரம்' - ஆய்வகத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது?

PM Modi
பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பல அன்பளிப்புகளை வழங்கினார். அவற்றில் அவரது மனைவி ஜில் பைடனுக்கு வழங்கிய கிரீன் டைமண்ட் எனப்படும் செயற்கை வைரமும் அடக்கம்.
 
அந்த வைரம் தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது ஏன்?
 
பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய 7.5 காரட் வைரத்தைப் பரிசாக அளித்துள்ளார்.
 
அந்த வைரம் விலைமதிப்பற்றது, நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது.
 
அதன் உருவாக்கத்தில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரமாக இருந்தாலும்கூட, பூமியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வைரத்தை ஒத்த ரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை இது கொண்டுள்ளது.
 
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதன் சிறப்பு என்ன, சாதாரண வைரங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
 
இந்தக் கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக பிபிசி, வைரத் தொழிலுடன் தொடர்புடையவர்களிடம் பேசியது.
 
அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு பிரதமர் மோதி பரிசளித்த வைரம் குஜராத் மாநிலம் சூரத்தில் தயாரிக்கப்பட்டது.
 
இந்தியாவில் வைரத் தொழிலின் மையம் என்று சூரத் அழைக்கப்படுகிறது. உலகின் ஒவ்வொரு 11 வைரங்களிலும் 9 வைரங்கள், சூரத்தில் வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்டவையாக இருக்கின்றன.
 
முகேஷ் படேலுக்கு சொந்தமான ‘க்ரீன்லேப்’ என்ற நிறுவனத்தில் பசுமை வைரம் தயாராகியுள்ளது.
 
'கிரீன் லேப்' 1960இல் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனம், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
 
இந்த நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவில் 25 மெகாவாட் சூரிய எரியாற்றல் ஆலையையும் நிறுவியுள்ளது. இந்த சோலார் ப்ளாண்ட் 90 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
 
கிரீன்லேப்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு மாதந்தோறும் 1 லட்சத்து 25 ஆயிரம் காரட் அளவிற்கு வைரங்கள் தயாராகின்றன.
 
இந்தியாவின் வைரத் தொழில்துறையினர் அனைவரின் சார்பாகவும் இந்த வைரம் ஜில் பைடனுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது என்று பிபிசியிடம் பேசிய முகேஷ் படேலின் மகன் ஸ்மித் படேல் தெரிவித்தார்.
 
"இந்த வைரம் விலைமதிப்பற்றது. சூரத்தில் வளர்ந்து வரும் ஆய்வக வைர தயாரிப்புத் தொழிலின் அடையாளம் இது," என்கிறார் ஸ்மித் படேல்.
 
கிரீன்லேப் நிறுவனத்தின் விற்றுமுதல் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்.
 
வைரத்தின் கட்-பாலிஷ் மற்றும் ஆய்வக வைரங்கள் தயாரிப்புடன் கூடவே இங்கு நகைகளும் செய்யப்படுகின்றன.
 
ஜில் பைடனுக்கு பிரதமர் மோதி பரிசளித்த வைரம் ஒரு காரட்டுக்கு வெறும் 0.028 கிராம் கரிமத்தை மட்டுமே வெளியிடும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் போன்ற வளங்கள் அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த வைரமானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
 
இந்த வைரம், சர்வதேச ஜெமோலாஜிக்கல் இன்ஸ்டிடியூட்டின்(IGI) ஜெமோலாஜிக்கல் லேப் மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வைரம் கட், நிறம், காரட், தெளிவு ஆகிய அனைத்து அளவுருக்களையும் பூர்த்தி செய்கிறது.
 
இது உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தின் கீழ் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது.
 
இயற்பியல்-வேதியியல் பண்புகள் முதல் அமைப்பு வரை, இது இயற்கையான வைரத்தைப் போலவே இருக்கிறது.
 
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்திற்கும் இயற்கை வைரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவ்வளவு எளிதாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
 
வழங்கப்பட்ட அன்பளிப்பின் விலை குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை என்றாலும், இந்த வைரத்தின் விலை சுமார் 17 ஆயிரம் டாலர்கள் அதாவது சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என்று வைர தொழில்துறையுடன் தொடர்புடைய நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
அதுவே, இயற்கை வைரத்தில் 7.5 காரட் வாங்க வேண்டும் என்றால், அதற்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவாகும். ஆய்வகத்தில் 7.5 காரட் எடையுள்ள வைரத்தை உருவாக்க 40 நாட்கள் ஆகும்.
 
இப்போது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்கு சந்தையில் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் இந்தத் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் சூரத்தின் வைர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
முன்பு அமெரிக்கன் வைரம், க்யூபிக் சிர்கோனியா, மொசோனைட் மற்றும் வெள்ளை புஷ்பராகம் ஆகியவை மிகவும் பிரபலமான செயற்கை வைரங்களாக இருந்தன.
 
ஆனால் அவற்றின் பிரகாசமும் அடையாளமும் இயற்கை வைரங்களிலிருந்து வேறுபட்டது. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்கள் அப்படி அல்ல.
 
ஆய்வகத்தில் வைரங்களை உருவாக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலையில் தயாரிப்பது ஒரு பொதுவான செயல்முறையாக உள்ளது. இது உயர் அழுத்தம், உயர் வெப்பநிலை (HPHT) முறை என்று அழைக்கப்படுகிறது.
 
இந்தச் செயல்பாட்டில் அழுத்தம் ஏழு லட்சத்து முப்பதாயிரம் சதுர அங்குலமாகவும், வெப்பநிலை சுமார் 1500 டிகிரி செல்ஷியஸாகவும் வைக்கப்படுகிறது.
 
பொதுவாக கிராஃபைட், வைரத்தின் விதையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது 1500 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அடைந்தவுடன் ஒரு சிறப்பு செயல்முறை மூலம் வைரமாக மாற்றப்படுகிறது.
 
செயற்கை வைரங்களை உருவாக்கும் மற்றொரு செயல்முறை, ரசாயன நீராவி படிவு. இது CVD என்று அழைக்கப்படுகிறது.
 
இதில் 800 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் வாயு, சேம்பர் அறைக்குள் செலுத்தப்படுகின்றன.
 
பின்னர் மைக்ரோவேவ், லேசர் அல்லது எலக்ட்ரான் ஒளிக்கற்றை போன்றவற்றால் அந்த அறையில் கெமிக்கல் செயல்முறைக்கு உள்ளாக்கப்படுகிறது.
 
இதில் ஹைட்ரோகார்பன் வாயு மற்றும் மீத்தேன் ஆகியவற்றில் உள்ள கரிமம், வைரமாக மாறுகிறது.
 
எதிர்காலத்தில் ஆய்வக வைரத் தொழில், இயற்கை வைரத் தொழிலை பின்னுக்குத் தள்ளிவிடக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
பிபிசியிடம் பேசிய சூரத் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலர் தாம்ஜிபாய் மவானி, "இந்தியாவில் ஆய்வக வைரத் தொழில் வளர்ச்சியடைந்தால், சூரத்தின் வைரத் தொழில் நிச்சயம் பலனடையும்" என்றார்.
 
"ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்கள் இயற்கை வைரங்களை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு விலையில் கிடைக்கின்றன. எனவே இயற்கையான வைரங்களை வாங்க முடியாத பிரிவினர் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களை வாங்குவார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த வைரத் தொழிலும் பயனடையும்,” என்றார் அவர்.
 
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் இயற்கை வைரங்களைவிட மலிவானதா? ஆம் என்பதே இதற்குப் பதில். செயற்கை வைரங்கள் இயற்கை வைரங்களைவிட 30 சதவிகிதம் வரை மலிவானவை. ஆனால் அவற்றுக்கு மறு விற்பனை மதிப்பு இல்லை.
 
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்குப் பின்னர் ஆய்வக வைரங்களின் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்தால், அவற்றின் விலை மேலும் குறையக்கூடும் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆயினும் சிலர் இந்தக் கருத்துடன் உடன்படவில்லை.
 
ஆய்வக வைரங்களை மட்டுமே ஊக்குவிப்பது இயற்கை வைரத் தொழிலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சில வைர வியாபாரிகள் கருதுகின்றனர்.
 
"ஆய்வக வைரங்களுக்கு மறு விற்பனை மதிப்பு இல்லை. எனவே அவை மலிவானவை என்றாலும்கூட அவற்றை இயற்கை வைரங்களுடன் ஒப்பிட முடியாது,” என்று வைர ஏற்றுமதியாளர் கீர்த்தி ஷா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஜில் பைடனுக்கு பசுமை வைரத்தை வழங்கியதன் மூலம் பிரதமர் மோதி சூரத்தின் வைரத் தொழிலுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று சூரத்தை தளமாகக் கொண்ட வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸின் நிறுவனரும் தலைவருமான சவ்ஜிபாய் தோலகியா பிபிசியிடம் கூறினார்.
 
“ஆய்வக வைரங்கள், வைரத் தொழிலின் எதிர்காலம். முன்பு கச்சா வைரம் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரம் இப்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றமளிக்கும்,” என்று சவ்ஜிபாய் தோலக்கியா குறிப்பிட்டார்.
 
"சூரத்தின் பல தொழிலதிபர்கள் இப்போது ஆய்வக வைரங்களை நோக்கித் திரும்புகின்றனர். இதற்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர்," என்று அவர் கூறினார்.
 
"சூரத்தின் வைர தொழில்துறை அதன் செயலாக்கப் பிரிவில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தினால், சூரத்தின் வைரங்கள் இன்னும் பிரபலமாகும். சூரத்தின் வைரத் தொழில்துறை இதுபோன்ற பசுமை வைரத்திற்கான வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது,” என்கிறார் சூரத் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலர் தாம்ஜிபாய் மவானி.
 
"சூரத்தில் சிலர் ஆய்வக வைரங்களை CVD நுட்பத்துடன் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் சூரிய மற்றும் காற்றாலை சக்தியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது. மேலும் இதுபோல் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கும்,” என்று இந்தியன் வைர நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் தினேஷ்பாய் நவாடியா பிபிசியிடம் கூறினார்.
 
மேலும் பிரதமர் மோதியை பாராட்டிய அவர், "சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவின் அடையாளமாக சூரத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 காரட் எடைகொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த வைரத்தை பிரதமர் மோதி அமெரிக்க முதல் பெண்மணிக்கு வழங்கினார். 'மேக் இன் இந்தியா’ என்ற கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது,” என்றார்.
 
சூரத்தின் வைரத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்ததன் மூலம் பிரதமர் மோதி, ஆய்வக வைரங்களை அமெரிக்காவில் மேலும் பிரபலமாக்கியுள்ளார் என்று வைரத் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
 
"இயற்கை வைரங்கள் ‘Non blood’ வைரங்கள் என்று சான்றளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் ஆய்வக வைரங்களுக்கு அது தேவையில்லை. மேலும் இது பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்படலாம். அதன் வாடிக்கையாளர்கள் அதிகரித்தால் அதன் விலை மேலும் குறையக்கூடும்,” என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸின் இயக்குநர் ஜெயந்திபாய் நரோலா பிபிசியிடம் கூறினார்.
 
இந்தியாவில் ஆய்வக வைரங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளார்களா?
ஜில் பைடனுக்கு பிரதமர் மோதி பரிசளித்த செயற்கை வைரம் தயாரிக்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES
"இந்தியாவில் ஆய்வக வைரங்களை ஊக்குவிப்பது சூரத்தின் வைரத் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கும்" என்று இந்தியன் வைர நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் தினேஷ்பாய் நவாடியா பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.
 
"முன்பு வைரங்களின் கட்-பாலீஷ் மற்றும் அதன் நகைகளை நாங்கள் செய்தோம். இப்போது நாங்கள் ஆய்வக வைரங்கள், கட்-பாலிஷ் மற்றும் நகைகளையும் தயாரிப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
“நாங்கள் ஆண்டுதோறும் 24 பில்லியன் டாலர் மதிப்புள்ள இயற்கை வைரங்களை ஏற்றுமதி செய்கிறோம். ஆய்வக வைரங்களின் ஏற்றுமதி 1.25 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் இதேபோல் வைரங்கள் தயாரிக்கப்பட்டால் அதன் ஏற்றுமதி நான்கு பில்லியன் டாலர்களை எட்டும்,” என்றார் அவர்.
 
இந்த ஆண்டு பட்ஜெட்டில் செயற்கை வைர விதைகளுக்கு சுங்க வரி விதிக்கும் அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய தினேஷ்பாய், "இந்தியாவில் உள்ள செயற்கை வைர உற்பத்தியாளர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்," என்றார்.
 
செயற்கை வைரங்களுக்கான உலகளாவிய வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே இந்தியாவின் வைரத் தொழில்துறையின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆய்வக வைர தயாரிப்புக்கான உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றும் சூரத்தின் வைரத் தொழில்துறை கூறுகிறது.
 
ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களின் ஏற்றுமதி குறித்த தகவல்களைத் தந்த தினேஷ்பாய்,” தற்போது இந்தியா 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வக வைரங்கள், நகைகளை ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு சந்தை சிறியது. ஆனால் இப்போது இந்தியாவில் முழு வீச்சில் உற்பத்தி தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் உள்நாட்டுத் தேவை அதிகரித்து, ஏற்றுமதியும் அதிகரிக்கும்,” என்றார்.
 
“ஆய்வகத்தில் வைரங்களை உருவாக்க எங்களுக்கு கச்சா பொருள் தேவை. இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டால், மலிவான விலையில் ஆய்வக வைரங்களைத் தயார் செய்யலாம்,” என்று தாம்ஜிபாய் மவானி குறிப்பிட்டார்.
 
'லேப் வைரங்கள் இரண்டு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று ஹெச்.பி.ஹெச்.டி மற்றொன்று சிவிடி. இதில் ஹெச்.பி.ஹெச்.டி வகையில் தயாரிப்பதற்கான செயற்கை வைர விதைகள் (கச்சா பொருள்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
 
சிவிடி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எனவே, ஹெச்.பி.ஹெச்.டி வகை செயற்கை வைரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் நாம் சீனாவை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் வைரத் தொழிலுக்கு லாபம் கிடைப்பதுடன், இந்தியாவின் அந்நியச் செலாவணியும் மிச்சமாகும்,” என்றும் தாம்ஜிபாய் குறிப்பிட்டார்.