ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:32 IST)

இலங்கையின் தமிழர் பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் ஏன்?

Srilanka
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பை அடுத்து, இந்த முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இலங்கையில் 1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் போராட்ட காலப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டனர்.
 
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், சிலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு கடையடைப்பு
 
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் பல தடவைகள்; கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
 
இந்த சட்டத்தினால் முன்னர் தமிழர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்ட சிலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என முதலில் தமிழர்கள் மாத்திரம் போராடிய நிலையில், தற்போது இந்த போராட்டத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் இணைந்துக்கொண்டுள்ளனர்.
 
வடக்கு, கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் முழு கடையடைப்பு போராட்டத்தில் முஸ்லிம்களும் இணைந்து கொண்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
 
குறிப்பாக வவுனியா நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
 
 
வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
 
அத்துடன், அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
 
ஏனைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
 
இன்றைய போராட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
 
 
வவுனியா நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது
 
''அரசாங்கம் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை (முழு கடையடைப்பு போராட்டம்) முன்னெடுக்கின்றது. இது அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.
 
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ளன. அப்படியென்றால், பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கான நோக்கம் என்ன?
 
யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த போதிலும், தேசிய இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டமானது, யுத்தத்தின் பக்கவிளைவாகவே நாங்கள் பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், சிங்கள குடியேற்றம், தமிழ், முஸ்லிம் மக்களின் இடங்களில் பௌத்த சிலைகளை வைப்பது போன்ற பல விடயங்களை அரசாங்கம் திட்டமிட்டு செய்துக்கொண்டிருக்கின்றது.
 
ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும், பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் தான் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
 
''பயங்கரவாதத் தடைச் சட்டம் 40 வருடங்களை கடந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கை மக்களை மிக வன்மையாக தண்டிக்கக்கூடிய ஒரு விடயமாக காணப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டாலும், ஒட்டு மொத்த மக்களும் அதனால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.
 
குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருக்கக்கூடிய விடயம் என்னவென்றால், சட்ட பாதுகாப்பு இல்லை." என அவர் கூறுகின்றார்.
 
தன்தரப்பு நியாயத்தை கூறுவதற்கான சந்தர்ப்பம் இந்த சட்டத்தில் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
 
பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்;பட வேண்டும் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் கூறுகின்றார்.