வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (11:30 IST)

டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர்

ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்ததன் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இதற்கிடையே அந்த நீர்மூழ்கி தொடர்பான எச்சரிக்களை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமை செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன.
 
ஓஷன்கேட் நிறுவனத்தினுடைய டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை அந்த நிறுவனத்தின் தலைவரால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக, ஒரு முன்னணி ஆழ்கடல் ஆய்வுப் பயண வல்லுநருடனான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன.
 
பிபிசியால் பார்க்கப்பட்ட அந்த மின்னஞ்சல்களில், ராப் மெக்கல்லம் என்ற வல்லுநர் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரஷ்ஷிடம் "அவர் தனது வாடிக்கையாளர்களை அபாயத்தில் தள்ளுவதாக" கூறியுள்ளார். மேலும், ஒரு சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படும் வரை டைட்டன் நீர்மூழ்கியைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் ராப் மெக்கல்லம் வலியுறுத்தியுள்ளார்.
 
அதற்கு, “புதுமையை நிறுத்தி வைக்க பாதுகாப்பு என்ற வாதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயலும் இந்தத் துறையைச் சேர்ந்த ஆட்களால் நான் சோர்வடைந்துள்ளேன்,” என்று ஸ்டாக்டன் ரஷ் பதிலளித்துள்ளார்.
 
ஓஷன்கேட்டின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக அவரை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து அந்தப் பதற்றம் மிகுந்த மின்னஞ்சல் பரிமாற்றம் முடிவுக்கு வந்ததாக ராப் மெக்கல்லம் கூறினார்.
 
 
டைட்டன் நீர்மூழ்கிக்கு சுயாதீன நிறுவனத்தின் சான்றிதழைப் பெற வலியுறுத்தல்
“நீங்கள் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் ஓர் அபாயகரமான நிலைக்குள் தள்ளுகிறீர்கள்,” என்று அவர் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவருக்கு எழுதியுள்ளார்.
 
மேலும், “டைட்டானிக் கப்பலை நோக்கிச் சென்றாக வேண்டுமென்ற உங்கள் பந்தயத்தில், அந்தக் கப்பலுக்குச் சொல்லப்பட்ட ‘அவள் மூழ்கடிக்கவே முடியாதவள்’ என்ற கூக்குரலையே உங்களுடைய டைட்டன் நீர்மூழ்கிக்கும் கூறுகிறீர்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டைட்டன் நீர்மூழ்கி உட்புறமிருந்து உடைந்து நொருங்கியதில் இறந்த ஐந்து பயணிகளில், இந்த மின்னஞ்சல்களில் அதன் பாதுகாப்பு அம்சங்களைத் தற்காத்துப் பேசிய ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவரான ஸ்டாக்டன் ரஷ்ஷும் ஒருவர். அவர், இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில், இந்த நீர்மூழ்கிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்குத் தனது விரக்தியை வெளிப்படுத்துகிறார்.
 
“நீங்கள் யாரையாவது கொன்றுவிடுவீர்கள்’ என்ற ஆதாரமற்ற கூச்சல்களை அடிக்கடி கேட்டிருக்கிறோம். நான் இதைத் தனிப்பட்ட முறையில் ஒரு தீவிர அவமானமாகவே எடுத்துக்கொள்கிறேன்,” என்று ரஷ் பதிலளித்துள்ளார்.
 
ராப் மெக்கல்லம் பிபிசியிடம் பேசியபோது, "டைட்டனை வணிகப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, அதற்கான சான்றிதழை வாங்குமாறு நிறுவனத்தைத் தொடர்ந்து தான் வலியுறுத்தியதாக" கூறினார். அந்த நீர்மூழ்கி வகைப்படுத்தப்படவோ அல்லது சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
 
“ஒரு நீர்மூழ்கி வகைப்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்படும் வரை, அதை வணிகரீதியிலான ஆழ்கடல் பயணங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது,” என்று மெக்கல்லம் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
 
மேலும் அதில், “உங்கள் சோதனைகள், ஆழ்கடல் பயண சோதனைகள் ஆகியவற்றில் மிக மிக அதிக கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், பாதுகாப்பு விஷயத்தில் மிகத் தீவிரமாக இருக்குமாறும் உங்களிடம் வலியுறுத்துகிறேன். தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நான் எந்த அளவுக்குப் பாராட்டுகிறேனோ, அதே அளவுக்கு நீங்களும் இந்தத் துறை முழுவதையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள்,” என்றும் அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கி குறித்த எச்சரிக்கைக்கு விரக்தியாக பதிலளித்த ஸ்டாக்டன் ரஷ்
சில நாட்களுக்குப் பிறகு அதற்குப் பதிலளித்த ஸ்டாக்டன் ரஷ், தனது தொழிலையும் டைட்டனின் பாதுகாப்பு குறித்தும் தற்காத்துப் பதிலளித்துள்ளார்.
 
ஓஷன்கேட் நிறுவனத்தின் “பொறியியல் சார்ந்த, புதுமையான அணுகுமுறை, நீர்மூழ்கி துறையிலுள்ள பழைமைவாதத்திற்கு முன்பாக உயரப் பறக்கிறது. அதுதானே புதுமையின் இயல்பு,” என்று ரஷ் கூறியுள்ளார்.
 
இந்த மின்னஞ்சல் பரிமாற்றம் முழுவதும், ஸ்டாக்டன் ரஷ் தனது தகுதிகளைத் தற்காத்துப் பேசியதோடு, ஆழ்கடல் பயண்களைச் சுற்றித் தற்போது நிலவும் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.
 
இந்தத் துறையில் “முன்னணியிலுள்ள நபர்கள்” அதில் “புதிதாக நுழைபவர்களை இந்தச் சிறிய சந்தையில் நுழைவதைத் தடுக்க முயல்வதாக” அவர் கூறியுள்ளார்.
 
“புதிய நீர்மூழ்கியில் கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதில் இருக்கும் ஆபத்துகள், சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு நான் நன்கு தகுதியானவன்தான்,” என்றும் ரஷ் பதிலளித்துள்ளார்.
 
பிறகு மெக்கல்லம், வெளிப்படையான வார்த்தைகளில், “கடலில் நடத்தப்படும் சோதனைகள்தான் நீங்கள் செய்ய உத்தேசித்துள்ள விஷயத்தை அந்த நீர்மூழ்கியால் கையாள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும். டைட்டன் மற்றும் டைட்டானிக்கைவிட அதில்தான் இந்த முயற்சி வெற்றி பெறுவதே அடங்கியிருக்கிறது; கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்,” என்று பதிலளித்துள்ளார்.
 
ஸ்டாக்டன் ரஷ், 2009ஆம் ஆண்டு ஓஷன்கேட் நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம், 250,000 டாலர் செலவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் கிடக்கும் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காணும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
 
இந்த மின்னஞ்சல் பரிமாற்றம் குறித்து ஓஷன்கேட் நிறுவனம் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
டைட்டானிக் பயணத்தின் பாதுகாப்பு குறித்து கவலை
 
வல்லுநர்கள் டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆழ்கடல் பயணங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். டைட்டன் நீர்மூழ்கியின் சோதனை முறை வடிவமைப்பு, அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் போன்றவை குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
ஓஷன்கேட் நிறுவனத்தின் அணுகுமுறை ‘பேரழிவு மிக்க’ சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து, இந்தத் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் 2018ஆம் ஆண்டில் ஸ்டாக்டன் ரஷ்ஷுக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ராப் மெக்கல்லமும் ஒருவர்.
 
“இந்தத் துறையைச் சேர்ந்த முக்கிய தொழில்முனைவோர்கள், இரண்டு காரணங்களுக்காக ஸ்டாக்டன் ரஷ்ஷின் திட்டத்தை நிறுத்தப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர்,” என்று தனது சொந்த கடல் பயண நிறுவனத்தை நடத்தி வரும் வல்லுநரான மெக்கல்லம் வெள்ளிக்கிழமையன்று பிபிசியிடம் தெரிவித்தார்.
 
“கார்பன் ஃபைபர் ஆழ்கடல் பயணத்திற்கு உகந்த பொருள் அல்ல என்பது முதல் காரணம். இதுதான் வகைப்படுத்தப்படாமல், சுயாதீன நிறுவனத்தால் சான்றழிக்கப்படாமல், வணிகரீதியிலான ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்ளும் ஒரே நீர்மூழ்கி என்பது அவரது முயற்சியை நிறுத்த முயன்றதற்கான இரண்டாவது காரணம்,” என்று விளக்குகிறார் மெக்கல்லம்.
 
நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்ட விதம்
நீர்மூழ்கிகள், கடலியல் நிறுவனங்களால் சான்றளிக்கப்பட வேண்டும் அல்லது “வகைப்படுத்தப்பட வேண்டும்.” எடுத்துக்காட்டாக, அமெரிக்கன் பியூரோ ஆஃப் ஷிப்பிங், நார்வேவில் உள்ள உலகளாவிய அங்கீகார அமைப்பு அல்லது லாயிட்ஸ் ரெஜிஸ்டர் போன்ற சுயாதீன அமைப்புகள் சான்றளிக்க வேண்டும்.
 
இதன் அடிப்படையில், உறுதிப்பாடு, வலிமை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களில் குறிப்பிட்ட தரத்தை நீர்மூழ்கி எட்ட வேண்டும். ஆனால், இந்தச் செயல்முறை ஒரு கட்டாயமான செயல்முறை இல்லை.
 
கடந்த 2019இல் ஒரு வலைப்பதிவில், ஓஷன்கேட் நிறுவனம் இந்த நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்ட விதம் இப்போது நிலவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளதாகக் கூறியது. ஆனால், “அதற்காக ஓஷன்கேட் நிறுவனம் அந்த அமைப்பு கூறும் தரநிலைகளை எட்டவில்லை என்று அர்த்தமல்ல,” என்றும் கூறியது.
 
“ஸ்டாக்டன் தன்னை ஒரு பெரிய தொழில்முனைவோராகக் கருதினார். அவர் இப்போது நிலவும் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு சிந்திக்க விரும்பினார். அவர் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. ஆனால், விதிமுறைகள் உள்ளன. அதோடு, ஆழமான பொறியியல் கொள்கைகளும் இயற்பியல் விதிகளும் உள்ளன,” என்று கூறுகிறார் மெக்கல்லம்.
 
டைட்டன் நீர்மூழ்கியில் யாருமே பயணம் செய்திருக்கக்கூடாது என்ற தனது வாதத்தில் மெக்கல்லம் உறுதியாக இருக்கிறார்.
 
“உறுதியான வெற்றி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் கொள்கைகளில் இருந்து நீங்கள் விலகிச் சென்றால், அதற்குச் செலுத்த வேண்டிய விலை பயங்கரமானதாக இருக்கும். எனவே அது மீண்டும் நடக்க அனுமதித்துவிடக்கூடாது. இந்த முறையே இது நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது,” என்று மெக்கல்லம் கூறுகிறார்.