1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (14:24 IST)

மயிலை கபாலீஸ்வரர் கோவில் மயிலம்மன் சிலை மாற்றப்பட்டதா?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மயில் சிலை ஒன்று காணமல்போனதாக புகார் கூறப்பட்ட நிலையில், அந்த சிலையை திருக்கோவிலின் குளத்தில் தேட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவுசெய்துள்ளது.

இந்தக் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் கபாலீஸ்வரரை மலரால் அர்ச்சிக்கும் வகையில் மயில் சிலை இருந்ததாகவும் 2004ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டதாகவும் திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இதுபோல பாம்பை வைத்திருக்கும் மயிலின் சிலை இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த சிலையை தேடி எடுத்து வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மலரை அலகில் வைத்திருப்பது போன்ற சிலை மயிலாப்பூர் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், குளம் முழுவதையும் தோண்டித் தேட முடியாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை வல்லுநர்கள் உதவியைக் கொண்டு முதலில் ஆய்வு நடத்திவிட்டு, பிறகு குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் தோண்டுவதற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவுசெய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், மயிலின் வாயில் பூ இருந்ததற்கான புகைப்பட ஆதாரம் ஏதும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் வசம் இந்தக் கோவிலில் உள்ள சிலைகளின் பட்டியல் உள்ளது. அதன்படி இந்தக் கோவிலில் 161 சிலைகள் உள்ளன. 127வது சிலையாக மயில் வடிவில் அருள்மிகு கற்பகாம்பாள் சிலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் மயிலின் வாயில் மலர் உள்ளதா பாம்பு உள்ளதா என்பது குறிப்பிடப்படவில்லை.

ஆனால், கோவிலில் நீண்டகாலமாக வழிபட்டுவரும் பல்வேறு தரப்பினர் வாயில் பூ வைத்திருக்கும் மயிலின் சிலை இருந்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆகவே, சிலை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள பாம்புடன் கூடிய மயிலின் சிலையை அகற்றிவிட்டு, மலருடன் கூடிய மயிலின் சிலையை புதிதாக செய்து வைக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அப்படிச் செய்ய வேண்டுமானால், நான்கு மாத கால அவகாசம் வேண்டுமென அறநிலையத் துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரர் திருக்கோவில் சார்பில் 2005ஆம் தல வரலாறு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 1993ல் வெளியான புத்தகத்தின் மறுபதிப்பாக இந்த நூல் வெளியானது. இதில், இந்தப் புன்னைவன நாதர் சந்நிதி பற்றி குறிப்பிடப்படுகிறது.

"இக்கோவிலுக்குரிய தல விருட்சம் புன்னை மரமாகும். உமையம்மை புன்னை மரத்தடியில் சிவலிங்க வழிபாடு செய்தார். இக்காட்சியை புன்னைவன நாதர் சந்நிதி விளக்குகிறது. இங்கு உமையம்மை மயில் வடிவில் பூசை செய்யும் காட்சியை இங்குள்ள சிற்பம் சித்தரிக்கிறது" என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை, பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களைத் தவிர வேறு தகவல்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர்.

இந்த மயில் சிலை காணாமல் போனாதாகக் கூறப்பட்டு, அந்தக் கோவிலில் குடமுழுக்கு நடக்கும்போது கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் என்பவர் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதற்கு நடுவில், இந்தச் சிலை அருகில் உள்ள நந்தவனத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுவதால், அந்தப் பகுதியையும் தோண்டிப் பார்க்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவுசெய்திருக்கிறது. இந்தப் பணிகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே வரும் வாரத்தில் சிலை தொடர்பான இந்தப் புதிருக்கு விடை கிடைக்கலாம்.