செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (14:27 IST)

யுக்ரேன் போர்: அணு ஆயுத அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் "அணு ஆயுத தடுப்புப் படைகளை" ஒரு "சிறப்பு போர்ச் சூழலுக்கு" நகர்த்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அதன் பொருள் என்ன?

இது தெளிவாக இல்லை என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்ய அணு ஆயுதங்களுக்கான தயார் நிலைகள் பற்றிய தங்களின் புரிதலுடன் புதின் பயன்படுத்திய மொழி சரியாகப் பொருந்தவில்லை என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதின் மிகக் குறைந்தபட்ச "நிலையான" எச்சரிக்கை மட்டத்திலிருந்து, , அடுத்த "உயர்ந்த" நிலைக்கு உத்தரவிட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது உறுதியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அசைவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தயார்நிலையை அதிகரிக்கிறது.

மேலை நாடுகள் அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வல்லவை என்று அறிந்த புதின், உண்மையில் அதைப் பயன்படுத்த விரும்பமாட்டார் என்றும் ஒரு பொதுவான கருத்தாகவே அவர் இதை வெளியிட்டிருப்பார் என்றும் பலர் கருதுகின்றனர். இந்த அறிவிப்பு வெறும் வாய் வார்த்தையாக இருக்கும் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆபத்துகள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

இது புதிய எச்சரிக்கையா?

ரஷ்யாவின் திட்டங்களில் மற்ற நாடுகள் தலையிட்டால், "அவர்கள் இதுவரை கண்டிராத" விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் புதின் மறைமுகமாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யுக்ரேனில் நேரடியாக ராணுவ ரீதியாக ஈடுபட வேண்டாம் என்று நேட்டோவுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவே இது பார்க்கப்பட்டது.

ரஷ்யா இதை அணு ஆயுதப் போராக மாற்றும் என்றறிந்த நேட்டோ நாடுகளும் அப்படிச் செய்யாது என்றே தெளிவாகக் குறிப்பிட்டுவந்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை மிகவும் நேரடி மற்றும் வெளிப்படையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஏன் இந்தப் புதிய எச்சரிக்கை

"ஆக்ரோஷமான அறிக்கைகளுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதின் கூறினார். இந்த அறிக்கைகள் மேற்கத்திய நாடுகளின் ஆட்சியாளர்கள், குறிப்பாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் விடுத்தவை என்று நேட்டோ நாடுகளுடனான மோதல் குறித்த சாத்தியக்கூறுகளை வெளியிட்டு திங்களன்று ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் அறிக்கை கூறியது. யுக்ரேன் குறித்த புதினின் கணிப்பு தவறானதால் இந்தப் புதிய எச்சரிக்கை வந்திருக்கலாம் என்று மேலை நாடுகள் கருதுகின்றன.

யுக்ரேனிடமிருந்து இவ்வளவு எதிர்ப்பையும் மேலை நாடுகளிடமிருந்து ஒருங்கிணைந்த கடுமையான பொருளாதாரத் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் புதின் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால், அது அவரை புதிய வழிகள் மற்றும் கடினமான பேச்சுக்கும் இட்டுச் சென்றுவிட்டது.

"இது கோபம், விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் அடையாளம்" என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் என்னிடம் கூறினார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், ரஷ்யா தன்னை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாடாகவும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் தான் ஒரு படையெடுப்பு நாடல்ல என்பதையும் காட்டிக்கொள்ளவே இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறது என்று கூறுகிறார்.

இப்படிப் பார்த்தால், இந்தச் செய்தியை தன் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தும் விதமாகத்தான் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டும். யுக்ரேனியர்களுக்கு இராணுவ உதவியை வழங்குவதற்கான மேற்கத்திய நாடுகளின் திட்டங்கள் குறித்து புதின் கவலை கொண்டுள்ளார். மேலும் இதை அதிகரிக்க வேண்டாம் என்றும் அவர்களை எச்சரிக்க விரும்புகிறார்.

மற்றொன்று, அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் அவரது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் என்றே திட்டமிடப்பட்டவை என்று அவர் கவலைப்படுகிறார். ஆனால் ஒட்டுமொத்த செய்தியும் நேட்டோவுக்கு, நேரடியாகக் களமிறங்கினால் விளைவுகள் விபரீதமாகும் என்ற ஒரு எச்சரிக்கையாகவே தெரிகிறது.

என்னென்ன அபாயங்கள்?

புதினின் அச்சுறுத்தல் வெறும் எச்சரிக்கை மட்டுமேயன்றி அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தைக் குறிக்கவில்லை என்று கொள்ளப்பட்டாலும், ஒரு தரப்பு, தவறாகப் புரிந்து கொண்டால் நிலைமை கைமீறிப் போகும் அபாயம் உண்டு.

புதினுக்கு உண்மையை எடுத்துரைக்கக்கூடிய ஆலோசகர்கள் அதிகம் இல்லாததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டவராகத் தெரிகிறார். அவருடைய கணிப்புகள் தவறாகி வருவதைக் குறித்துச் சிலர் அஞ்சுகிறார்கள். அவர் அத்து மீறிச் சென்றால், அவரது உத்தரவுகளை மேற்கொண்டு செயல்படுத்த கீழுள்ளவர்கள் தயாரக இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. அணு ஆயுத மோதல் அபாயங்கள் சற்று அதிகரித்திருக்கலாம், ஆனால் அவை பொதுவில் இன்னும் குறைவாகவே உள்ளன.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

இதுவரை, மேற்கத்திய நாடுகள், அளவுகடந்து எதிர்வினையாற்றாமல் எச்சரிக்கையாக உள்ளன. அமெரிக்க ராணுவம் Defcon எனப்படும் தன் சொந்த பாதுகாப்பு தயார்நிலை எச்சரிக்கை நிலையைக் கொண்டுள்ளது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இந்த நேரத்தில் தன் அணு ஆயுத எச்சரிக்கை நிலையை மாற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறினார்.

பிரிட்டனும் கடலில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது. ஆனால், பகிரங்கமாக எதையும் கூற அது விரும்பவில்லை. ரஷ்ய அறிக்கையைப் பெரிய அளவில் பொருட்படுத்தாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்வதே நோக்கமாகத் தெரிகிறது. மாறாக, அதற்கு முக்கியத்துவமளித்து எதிர்வினையாற்றினால் ரஷ்யா மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடும்.

இது தற்போது அணுசக்தி நெருக்கடி அன்று என்றும் அப்படி மாறிவிடக்கூடாது என்றும் மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்யாவின் செயல்பாடு மேற்கு நாடுகளுக்குத் தெரியவருமா?

ரஷ்ய அணு ஆயுதங்களின் நிலையில் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் பிபிசியிடம் தெரிவித்தார். அது உன்னிப்பாக கவனிக்கப்படும் என உளவுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பனிப்போரின் போது, மாஸ்கோவின் அணு ஆயுதக் கிடங்கைக் கண்காணிக்க மேற்கில் ஒரு பெரிய உளவுத்துறை இயந்திரம் உருவாக்கப்பட்டது. ஆயுதங்களையும் படைகளையும் தயார் செய்தல் போன்ற நடத்தை மாறுப்பட்டைக் கண்டறிய, செயற்கைக்கோள்கள், இடைமறித்த தகவல்தொடர்புகள் மற்றும் பிற ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அவற்றில் பெரும்பாலானவை அணு ஆயுதங்களின் நிலையில் மாற்றமிருப்பதாகத் தெரிவிக்கவில்லை. மேலும் நடத்தையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுமா என்பதைப் புரிந்துகொள்ள மேற்கு நாடுகள் ரஷ்ய நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இதுவரை எந்த அறிகுறியும் இல்லை.