ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (14:41 IST)

புதின் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீறிய பைடன்

யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என தெரிவித்தார்.

'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்க ஒன்றியத்தின் நிலை) உரையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்தியபோது பைடன் இவ்வாறு தெரிவித்தார்.

யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார் அவர்.

இதற்காக புதின் "நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்" என்றும் கூறினார் பைடன்.

சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது "சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்" அமெரிக்காவுடன் நிற்பதாக கூறினார் பைடன்.

பெரும் முதலாளிகளாலும், வன்முறை நிறைந்த இந்த ஆட்சியில் இருந்து பல்லாயிரம் கோடியைத் திருடிக் கொண்ட ஊழல் அதிகாரிகளாலும் ரஷ்ய ஆட்சி தாங்கிப் பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார் பைடன். தங்கள் ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்ய சொகுசுக் கப்பல்கள், ஜெட் விமானங்கள், சொகுசு சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாகவும் கூறினார் பைடன்.

"தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்," என்று அவர் கூறினார். எந்தெந்த ரஷ்யப் பெருமுதலாளிகள் மீது தடைவிதிக்கப்பட்டது என்ற பட்டியலை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளன.

மேலும் தனது உரையில், "கொடுங்கோன்மைக்கு எதிராக சுதந்திரமே எப்போதும் வெல்லும் என்பது அசைக்க முடியாதது" என உறுதிபட தெரிவித்தார்.

ஒற்றுமையாக இணைந்து யுக்ரேனுக்கு ஆதரவை தெரிவிக்குமாறு பைடன் கேட்டுக்கொண்டதற்கு, ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் கைத்தட்டல் மூலம் ஆமோதித்தனர்.

தொற்றுநோயால் சோர்வடைந்த அமெரிக்கர்கள், பண வீக்கத்துடன் போராடும் நிலையில், பைடன் இந்த 'ஸ்டேட் ஆஃப் யூனியன்' உரையை நிகழ்த்தினார்.

பைடன் மேலும் தன்னுடைய உரையில், "புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாத ஒன்று. ராஜீய ரீதியிலான தொடர்ச்சியான முயற்சிகளை புதின் புறக்கணித்தார்.

"நேட்டோவும் மேற்கு நாடுகளும் எதிர்வினையாற்றாது என அவர் நினைத்தார். மேலும், அவர் எங்களை பிரித்துவிடலாம் என நினைத்தார்," என அவர் கூறினார்.

கடந்தாண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப்பெற்ற பைடனின் குழப்பமான முடிவால், அமெரிக்கர்கள் மத்தியில் அவர் தன் புகழை இழந்தார்.

"புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். நாங்கள் தயாராகவே இருந்தோம்," என்றும் தெரிவித்தார் பைடன்.

மேலும், அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்றும், அவர் அறிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து வரும் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் நுழையத் தடை விதித்துள்ளன.

ரஷ்யாவுக்கு சொந்தமான அல்லது ரஷ்யாவால் இயக்கப்படும் விமானங்களுக்கு அமெரிக்க வான் பரப்பில் தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா வரவேண்டிய சில விமானங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகள் மற்றும் புதினுக்கு எதிராக பல்வேறு தடைகளை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் விதித்துள்ளன. புதின் தன் உரையில் மேலும் பொருளாதார தடைகளுக்கான தன் முந்தைய கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, "அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது" என தெரிவித்தார்.
யுக்ரேன் தூதர் கொசானா மர்கரோவாவையும் அமெரிக்க அதிபர் பைடன் நிகழ்வுக்கு வரவேற்றார். அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி கில் பைடனின் விஐபிகளுக்கான பகுதியில் அமர்ந்திருந்த, யுக்ரேன் தூதருக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டுத் தெரிவித்தனர்.

தனது உரைக்கு முன்னதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் 6 நாட்களைக் கடந்த நிலையில், அந்நாட்டுக்கு அமெரிக்கா என்ன உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்துப் பேசினார்.

"நாம் ஒவ்வொருவரும் எழுந்து நின்று, யுக்ரேனுக்கும் உலகத்திற்கும் தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும்," என பைடன் தெரிவித்தார்.

எதிரெதிர் துருவங்களான அமெரிக்காவின் இரு கட்சிகளும், ஒன்றாக இணைந்து யுக்ரேனுக்காக கைத்தட்டி, உற்சாகப்படுத்தினர். பைடனின் வருகைக்கு முன்னதாக, பலரும் யுக்ரேனின் தேசியக் கொடிகளை அசைத்தனர்.

RealClearPolitics கருத்துக்கணிப்பு சராசரியின்படி, வெறும் 40.6% அமெரிக்கர்கள் பைடனின் செயல்திறனில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தப் பின்னணியில் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை ஆற்றினார் பைடன்.

தனது மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை நெருக்கடியான யுக்ரேன் மீதான படையெடுப்பு குறித்து பேசிய பிறகு, தொற்றுநோய், விலைவாசி, குற்றங்களின் உயர்வு உள்ளிட்ட பல உள்நாட்டு பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார்.

அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக குறைந்துள்ளது, அதேவேளை பண வீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

"சிறந்த அமெரிக்காவை உருவாக்கும்" திட்டம் குறித்து அவர் உறுதியளித்தார்.

கார்கள் மற்றும் செமி கன்டக்டர்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நாட்டின் சாலைகள் மற்றும் பாலங்களை மீண்டும் உருவாக்குவது ஆகியவை உயரும் விலைவாசியை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி என்று பைடன் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றை பைடன் கையாண்ட விதத்திலும் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியாக இல்லை என, கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பைடன் உரை நிகழ்த்தியபோது நாடாளுமன்ற பிரதிநிதிகள், பல மாதங்களுக்குப் பின்னர், முகக்கவசம் அணிவது அவசியமில்லாத ஒன்றாக இருந்தது.

"கடந்தாண்டு கொரோனா தொற்று எங்களைப் பிரித்து வைத்தது. இறுதியாக, இந்தாண்டு நாம் மீண்டும் இணைந்துவிட்டோம்," என பைடன் தெரிவித்தார்.

இன்றும் அமெரிக்காவில் தினந்தோறும் 2,000க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. மற்ற உலக நாடுகளை விட இது மிகவும் அதிகம்.

அயோவா ஆளுநர் கிம் ரெனால்ட்ஸ் பைடனின் உரைக்கு குடியரசுக் கட்சியின் சார்பில் பதில் அளித்தார்.

"குடும்பங்களை தாக்கிய பணவீக்கம், வன்முறைக் குற்றங்கள் மற்றும் உலக வரைபடத்தை மீண்டும் வரைய முயன்ற சோவியத் ராணுவம்" போன்றவற்றின் மூலம், 70களின் பிற்பகுதிக்கு அமெரிக்காவை அதிபர் பைடன் செலுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.