1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2019 (15:11 IST)

ரஜினி தானாகவே ஆதரவு கொடுப்பார் - கமல் நம்பிக்கை

தமிழகத்தில் 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என உறுதிபட தெரிவித்தார். அதேவேளை நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவு தருவார் என நம்புவதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு "பேட்டரி டார்ச்" சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம்தான். தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்,'' என்றார்.
 
மேலும் தேர்தல் கூட்டணிகுறித்து பேசிய கமல், ''எங்கள் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நிச்சயம் வெல்வோம். தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும்,''என்றார்.
 
ரஜினிகாந்த்திடம் ஒரு நண்பராக ஆதரவு கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பதைவிட, அவரே எங்களுக்கு ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கேட்பதை விடக் கொடுப்பது சிறந்தது. அதேபோல, கேட்டுப்பெறுவதை விட, தானாக கிடைப்பது சிறப்பு,'' என்றார்.