1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (21:59 IST)

நிலவில் 50 ஆண்டுகளில் நாசா செய்யாததை சந்திரயான்-1 மூலம் சாதித்த இஸ்ரோ - அது என்ன தெரியுமா?

moon
இஸ்ரோவின் விண்வெளிப் பரிசோதனைகளில் மிகவும் சிக்கலான சோதனைகள் என்று சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.
 
பல நூறு கோடி ரூபாய் செலவழித்து இவ்வளவு பெரிய திட்டங்களைத் தொடரும் இஸ்ரோ என்ன சாதிக்கும்?
 
சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 மூலம் இஸ்ரோ என்ன சாதனைகளை நிகழ்த்தியுள்ளது?
 
சந்திரயான்-1 ஏவப்பட்ட போது, இஸ்ரோ ஆர்பிட்டரை மட்டுமே ஏவியதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆர்பிட்டருடன், மூன் இம்பாக்ட் ப்ரோப் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் (Moon Impact Probe) ஒன்றும் ஏவப்பட்டது.
 
சந்திரயான்-1ல் இருந்த ஆர்பிட்டர் சந்திரனைச் சுற்றி வந்த போது, ​​நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழவைக்கப்பட்டது.
 
அந்த உபகரணத்தின் நான்கு பக்கங்களிலும் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் மூவர்ணக் கொடி பத்து ஆண்டுகளுக்கு முன்பே நிலவை அடைந்ததாக கூறப்படுகிறது.
 
சந்திரயான்-1-ன் பணிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பத்து மாதங்கள் மற்றும் ஆறு நாட்களுக்குள், சந்திரயான்-1 ஆர்பிட்டரில் இருந்து சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.
 
சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை' அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது. ஆனால், அது ஒரு லேண்டரைப் போன்றது அல்ல.
 
அதாவது அது மெதுவாக, பாதுகாப்பாக நிலவில் இறங்காது. மாறாக நேரடியாக அதே நேரம் வேகமாக நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கும் உபகரணமாக இருந்தது. சந்திரயான்-1 இல் பொருத்தப்பட்ட இந்த உபகரணம் நவம்பர் 18, 2008 அன்று 100 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இது 25 நிமிடங்களில் சந்திரனின் மேற்பரப்பைத் தொட்டது.
 
“சாலையில் நிலச்சரிவு, தாங்க முடியாத குளிர்”– அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பகிர்ந்த அனுபவம்
 
சந்திரயான் 1 இல் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் அனுப்பிவைக்கப்பட்டது
 
அதன் பின் சந்திரனின் மேற்பரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று அறிவித்தது. சந்திரனின் மேற்பரப்பில் அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
 
இந்தியாவில் இஸ்ரோ பெரிய அளவில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியதற்கு முன்பே, 1969 இல் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.
 
அதன் பிறகு 1972 வரை நாசா 12 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் சந்திரயான் 1 மூலம் இஸ்ரோ ஏவிய, 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம்' அந்த சாதனையைப் படைத்தது.
 
சந்திரயான் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இது சுமார் நான்கு டன் எடையை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது.
 
அதன் பிறகு, அந்த ராக்கெட்டின் உதவியுடன் 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஏவப்பட்டது. இந்த முயற்சியின் போது விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற உலவியும் அனுப்பப்பட்டன.
 
அதன் பின் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் -2ன் சுற்றுக் கலன் (ஆர்பிட்டர்) வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இதுவரை இந்த ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பின் பெரும்பகுதியை படம் பிடித்துள்ளது. இந்த படங்களில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 
மேலும், இந்த ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என்று அப்போது இஸ்ரோ அறிவித்திருந்தது. இதுவரை மூன்று ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது.
 
அதுமட்டுமின்றி ஆர்பிட்டர் திறமையாக செயல்படுவதால் சந்திரயான்-3 திட்டத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரயான்-2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரே இத்திட்டத்துக்கும் பயன்படுத்தப்படும்.
 
இதனால் சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. சந்திரயான்-2 விண்கலத்தின் செலவு ரூ.978 கோடியாக இருந்தது. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்திற்கான செலவு ரூ. 615 கோடி மட்டுமே.
 
சந்திரயான் -2 இல் ஏவப்பட்ட நிலவின் நிலப்பரப்பை ஆய்வு செய்யும் உபகரணத்துடன் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை தொடர்பு கொள்ள முடிந்தது.
 
ஆனால், கடைசி நேரத்தில் அதனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அதில் இருந்த உலவி கூட அந்த உபகரணத்திலிருந்து வெளியில் வரவில்லை.
 
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. டெட்ரா பாக்கெட் விற்பனையின் நோக்கம் என்ன?
 
சந்திரயான்-3 மிஷன் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சந்திரயான் 3 திட்டத்தில் என்ன இருக்கிறது?
தற்போது விண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும் சந்திரயான்-3, இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் லேண்டர் மற்றும் ரோவர் வைக்கப்பட்டிருக்கும் அலகை எடுத்துச் செல்வது ஒரு கூறு. பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதியை பாதுகாப்பாக தரையிறக்கப் பயன்படும் ஒருங்கிணைந்த தொகுதி மற்றொரு கூறு.
 
லேண்டர் தொகுதி, அதிலிருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்கும். அது பாதுகாப்பாக இறங்கிய பின், ரோவர் வெளியேறுவதற்கான சாய்வான அமைப்பு மெதுவாக வெளியேறும். அதன் பின் ரோவர் (உலவி) வெளியே வரும்.
 
இந்த ரோவர் சந்திரனின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும். இதில் கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும்.
 
அங்கிருந்து தரையிலுள்ள இஸ்ரோவுக்கு இந்தத் தரவுகள் வந்தடையும். சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏற்கனவே 3,400 முறைக்கு மேல் சந்திரனின் மேற்பரப்பை வட்டமிட்டுள்ளது. அங்கிருந்து அது அனுப்பிய தரவுகளைக் கொண்டு இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
 
 
சந்திரயான் -3 இல் அனுப்பிவைக்கப்படும் லேண்டரும் ரோவரும் நிறைய பரிசோதனைகளைச் செய்து சில குறிப்பிட்ட முக்கிய தரவுகளைப் பெறவேண்டும்.
 
அவற்றுள், நிலவின் மேற்புற ஆராய்ச்சி, நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களைக் கண்டுபிடிப்பது, அங்கு தனிமங்கள் உள்ளதா எனத் தேடுதல், நிலவின் வளிமண்டலத்தைக் கண்காணிப்பது, நீர் மற்றும் பனி வடிவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது, சந்திரனின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்புவது, மேற்பரப்பின் வேதிப்பகுப்பாய்வு மற்றும் அவற்றில் உள்ள தனிமங்களின் அடிப்படையில் சந்திரன் எப்படி உருவானது என்ற ரகசியத்தைக் கண்டறிய முயற்சிப்பது, அதன் அடிப்படையில் 3D வரைபடங்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை இவை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
 
சந்திரயான் 3 இல், நிலவில் தரையிறங்கும் லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவரில் இரண்டு முக்கிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
அவற்றில் ஒன்று லேசர் கதிர்களைப் பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்கள் மற்றும் தனிமங்கள் பற்றி ஆராய்வது. இந்த உபகரணம் சுருக்கமாக லிப்ஸ் (LIB - Laser Induced Breakdown Spectroscopy) என அழைக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரையிறங்கிய பின், இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கதிர்கள் சந்திரனின் மேற்பரப்பில் பாய்ச்சப்படுகின்றன.
 
இதனால் அங்குள்ள மண் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகி பற்றி எரியும். இதையடுத்து அந்த மண்ணிலிருந்து வாயுக்கள் வெளியேறும். அந்த வாயுக்களை நிறமாலை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும்.
 
இது போன்ற நிலவரங்களை அறிந்து, எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்க ஏற்ற சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்துவது மட்டுமின்றி, சந்திரனின் பிறப்பு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
 
சந்திரயான்- 3 சவால்கள் நிறைந்த பல பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது
 
சந்திரனின் பிறப்பு குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. சந்திரன் பூமியில் இருந்து உருவானது என்றும், ஒரு பெரிய குறுங்கோள் பூமியில் மோதியதில் உருவான கோளம் என்றும் பலவாறு அவை விவரிக்கின்றன.
 
சந்திரயான் மேற்கொள்ளவிருக்கும் சோதனைகள் மூலம் அவை அனைத்தையும் அறிய முடியும் என்று சோம்நாத் தெரிவித்தார்.
 
நிச்சயமாக, ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் என இரண்டையும் ஒரே நேரத்தில் அனுப்புவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இரண்டையும் ஒரே ராக்கெட் மூலம் ஏவியது இஸ்ரோ.
 
மேலும், ஆர்பிட்டருடன், நிலவில் தரையிறங்கும் ரோவரும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சந்திரயான்-2ல் ஏற்பட்ட குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, தரையிறங்குவதை மிகவும் திறமையாகவும், சீராகவும் செய்ய இஸ்ரோ பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.