வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (10:40 IST)

இந்திய மக்கள் தொகை பெருக்கத்தால் ஆபத்தா? தவறான நம்பிக்கையும் உண்மை நிலையும்

இந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை வெளியிட்டு இருக்கிறது.
 
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை மறுப்பது, அரசுப் பணியில் பதவி உயர்வுகளை மறுப்பது, அரசு மானியங்களை மறுப்பது, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட மறுப்பது போன்ற பல விஷயங்களை இச்சட்டம் முன்மொழிகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சுமார் 22 கோடி பேர் வாழ்கிறார்கள். இந்த பெரிய மாநிலத்தை நிர்வகிப்பது என்பது எப்போதும் சவாலானதாகவே இருந்து வருகிறது. இம்மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குறியீடுகளில் கடைசி இடத்தைப் பிடித்து வருகிறது.
 
ஆனால் நிபுணர்களோ இந்தியாவைப் போன்றே உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்கிறார்கள்.
 
இரண்டு குழந்தைகள் என்கிற கொள்கை, பாதுகாப்பற்ற உடலுறவு, குழந்தையின் பாலினம் அறிந்து கருகலைப்பை மேற்கொள்வது போன்றவை பிரச்சனைகளை ஊக்குவிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

உத்தரப் பிரதேச சட்ட ஆணையத்தின் இச்சட்ட வரைவுகளும், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான அம்மாநிலத்தின் மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையும், ஒன்றொடு ஒன்று முரண்படுகின்றன. எனவே நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
 
உத்தரப் பிரதேசத்துக்கு இரு குழந்தைகள் சட்டம் தேவையா?
 
இல்லை என ஒரு வரியில் பதில் கொடுக்கிறார்கள் நிபுணர்கள்.
 
இந்தியாவின் அதிகாரபூர்வ மக்கள் தொகை கணக்கு, இந்தியாவில் மக்கள் தொகை அளவுக்கு அதிகமாக பெருகவில்லை என்கிறது. சராசரியாக, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும் பெண்கள், முன்பு பெற்றுக் கொண்ட குழந்தைகளை விட தற்போது குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தை பெறுகிறார்கள். எனவே மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது.
 
"உத்தரப் பிரதேசத்தில் இன்னும் 18 சதவீதத்தினருக்கு கருத்தடை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு கருத்தடை சார்ந்த சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் பாபுலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநர் பூனம் முத்ரெஜா.
 
உத்தரப் பிரதேசத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 1993ஆம் ஆண்டு 4.82 ஆக இருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டில் 2.7 ஆக சரிந்திருக்கிறது. இது வரும் 2025ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக குறையலாம் என அரசின் எதிர்கால மதிப்பீட்டில் கணிக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கும் போது, மக்கள் தொகை கட்டுப்பாடுகளை ஊக்குவிப்பது எதிர்மறை விளைவுகளைத் தான் உண்டாக்கும் என்கிறார் முத்ரெஜா. காரணம் இந்தியாவின் 70 சதவீத மக்கள் தொகை அதிகரிப்பு இளம் வயதினரிடம் இருந்து தான் வரவிருக்கிறது என்கிறார் அவர்.
 
இந்தியாவின் 22-ல் 19 மாநிலங்களில் மக்கள் தொகை மாற்று நிலை (Population Replacement Rate) 2.1-ஐ விட குறைந்துவிட்டது என சமீபத்தைய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு கூறுகிறது.
 
அதாவது மக்கள் தொகை ஏறாமலும் இறங்காமலும் இருக்க வேண்டுமானால், எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டுமென்ற விகிதம் தான் இந்த மக்கள் தொகை மாற்று நிலை (Population Replacement Rate).
 
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு, அரசு நலத் திட்டங்கள், நகர்புறமயமாதல், கருத்தடை சாதனங்கள் போன்றவைகள் தான் இந்த மக்கள் தொகை சரிவுக்கு உதவின.
 
உலக நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகப் பெரிய சரிவுகளைச் சந்தித்து இருக்கின்றன. 2070ஆம் ஆண்டு வாக்கில், உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம், மக்கள் தொகை மாற்று விகிதத்தை விட குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐநா கூறுகிறது.
 
கடந்த 2020ஆம் ஆண்டில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1.3 ஆக சரிந்தது. இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிகாரபூர்வ கணக்கெடுப்பின் போது குழந்தை பிறப்பு விகிதம் 2.2ஆக இருந்தது.
 
இப்போது ஏன் இந்த சட்டம்?
 
உத்தரப் பிரதேசம், பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த மாநிலங்களில் எல்லாம் மக்கள் தொகை மாற்று விகிதமான 2.1-ஐ விட குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
 
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை மாற்று விகிதமான 2.1-ஐ விட குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.
 
"நம் நாட்டில் இருக்கும் நகரங்களிளும் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. நகரங்கள் மோசமாக திட்டமிடப்பட்டு இருக்கின்றன. அது மக்கள் தொகை அதிகமாக இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாபுலேஷன் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கே எஸ் ஜேம்ஸ்.
 
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தலை முன்னிட்டு, வளர்ச்சியை முன்னிறுத்தும் முதல்வராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இதைப் பயன்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 
இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் ஒன்றும் புதியதல்ல. இரண்டு குழந்தைகள் கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்கள்.
 
அதே ஆண்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை விதிக்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது நினைகூரத்தக்கது.
 
கடந்த ஆண்டு கூட மூன்று பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டங்களை முன்மொழிந்தார்கள்.
 
1990களிலிருந்து இந்தியாவின் 12 மாநிலங்கள் இரு குழந்தைகள் திட்டத்தை பல்வேறு முறைகளில் அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது வேலை செய்யுமா?
 
இது குறித்து எந்த ஒரு சுயாதீன மதிப்பீடுகளும் இல்லை, இருப்பினும் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாதுகாப்பாற்ற உடலுறவு, கருவின் பாலினம் அறிந்து அதைக் கலைப்பது, விவாகரத்து, தேர்தலில் போட்டியிட தங்கள் குழந்தைகளை மற்றொருவருக்கு தத்து கொடுப்பது போன்ற பிரச்சனைகள் அதிகரித்ததைக் காட்டுகிறது.
 
பொதுவாக இப்படிப்பட்ட சட்டங்கள் கலவையான முடிவுகளைக் கொடுக்கின்றன. இந்தியாவின் நான்கு மாநிலங்களில் இந்த சட்டங்கள் பின்வாங்கப்பட்டு இருக்கின்றன.
 
பீகாரில் 2007-ல் அமல்படுத்தப்பட்ட இது போன்ற மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் அமலில் இருந்தும், இந்தியாவில் அதிக குழந்தைகள் பிறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
 
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு விதிகள் ஏதுமின்றி குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது.
 
"மக்கள் தொகைப் பரவலைப் பொறுத்த வரை இந்தியா சரியான இடத்தில் இருக்கிறது" என்கிறார் பாபுலேஷன் கவுன்சில் ஆஃபீஸ் அமைப்பின் இயக்குநர் நிரஞ்சன் சகுர்தி.
 
"நாம் கல்வி, சுகாதார அமைப்புகளில் நிறைய முதலீடு செய்ய வேண்டும்" என்கிறார் முத்ரெஜா. "இலங்கையில் பெண்களின் திருமண வயதை அதிகரித்து இருக்கிறார்கள். வங்கதேசம் அல்லது வியட்நாமில் தற்காலிக கருத்தடை சாதனங்கள் உக்குவிக்கப்படுகின்றன. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்" என்கிறார் முத்ரெஜா.