டெல்லி விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக்கும் ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் விவசாயிகள்

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (14:29 IST)
வேளாண் சங்கங்களின் போராட்டத்தால் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு நுழையும் எல்லைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர்.

பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் போராடக் கிளம்பியுள்ளதாக வெள்ளியன்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

டெல்லியை ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை போராடும் விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளதால், அங்கு கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் கடந்து செல்வதைக் காட்டும் காணொளிகளும் நேற்று வெளியாகின.

இதன் பின்னணியிலேயே, ஹரியானா மாநிலம் குர்கான் எல்லையில் சுமார் 2,000 காவல் துறையினரும், ஃபரிதாபத் எல்லையில் சுமார் 3,500 காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு நுழையும் பல நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தனர்.

சனியன்று சில மணிநேரம் மூடப்பட்டிருந்த ஜெய்ப்பூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

சிங்கு எல்லையில் நவம்பர் இறுதி முதலே பல்லாயிரம் விவசாயிகள் கடும் குளிரை மீறி போராடி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள்

இதனிடையே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்களின் தலைவர்கள் இந்திய அரசு புதிதாக இயற்றி உள்ளே மூன்று சட்டங்களுக்கும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்று இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டங்களை அரசு திரும்பப்பெறக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் புதிய சட்டங்கள் மூலம் தங்களுக்கு எவ்வாறு பலன் கிடைக்கிறது என்பதையும் தம்மைச் சந்தித்த விவசாயிகள் தெரிவித்தனர் என்று நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

நரேந்திர மோதி உரை: 'விவசாயிகளின் நன்மைக்கே'

சனிக்கிழமை அன்று பெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தொழில் அமைப்பின் வருடாந்திர நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி புதிய வேளாண் சீர்திருத்தங்கள் வேளாண்துறையில் முதலீட்டுக்கு வழிவகுக்கும் என்றும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சட்டங்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இயற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் மண்டிகளில் மட்டுமல்லாது வெளிச் சந்தைகளிலும் தங்கள் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்று நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டம்

ஆனால் நரேந்திர மோதியின் பேச்சு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி அமைப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

டிசம்பர் 14, ஞாயிரன்று, தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 32 வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மீண்டும் பேச விரும்பினால் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், முதலில் அந்த மூன்று சட்டங்களை திரும்பிப் பெறுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர்.

நவம்பர் இறுதியில் போராட்டம் தொடங்கியபின், இந்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

புதிய சட்டங்களைத் திருத்த உத்தரவாதம் தருவதாக அரசு கூறுகிறது. அவற்றைத் திரும்பப்பெறுவதே தங்கள் ஒற்றைக் கோரிக்கை என்கின்றன விவசாயிகள் சங்கங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :