திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (08:37 IST)

நிவர் புயலுக்கு பெயர் வைத்தது இரான் - அடுத்து வரும் புயல்களுக்கு என்ன பெயர் தெரியுமா?

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக உருப்பெறும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
 
இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து.
 
இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம்.
 
இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.
 
இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது உறுப்பு நாடுகள் பெயரிட்டிருந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றிருந்ததுதான் கடந்த மே மாதம் கரையை கடந்த உம்பான் புயல்.
 
அதன் பிறகு புதிய பெயர் பட்டியலின்படி புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது.
 
பெயரிடும் நாடுகள் எவை?
 
உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.
உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.
 
டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.
 
இந்த வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது;அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது; ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது; ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது; மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
 
பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.
 
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
 
புயலுக்கு பெயர் வைக்க 9 நிபந்தனைகள்
இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. இந்த புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது; உலக அளவில் வாழும் மக்களில் எவ்விதத்தவரின் உணர்வை காயப்படுத்தும்படி பெயர் இருக்கக் கூடாது: மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக் கூடாது; சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையில் பெயர் இருக்க வேண்டும்; பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்; பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்; பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு; பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாக கூட அதை மறுஆய்வுக்கு உள்படுத்த அந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு; ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.
 
இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.
 
இந்தியா பரிந்துரைத்துள்ள பெயர்கள் வரிசையில், கதி, தேஜ், முரசு, ஆக் ஆகியவை உள்ளன. இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுக்கு இறுதி செய்த பட்டியலில் மொத்தமாக 169 பெயர்கள் உள்ளன. இதில் இருந்தே ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்படுகிறது.
 
முந்தைய புயலுக்கு இந்தியா கதி என பரிந்துரை செய்தது. அதற்கு இந்தி மொழியில் வேகம் என அர்த்தம். அதுபோல, தற்போதைய புயலுக்கு இரான் பரிந்துரைத்த நிவர் என்ற வைக்கப்பட்டிருக்கிறது. இரானிய மொழியில் நிவர் என்றால் வெளிச்சம் மற்றும் பிற மொழிகளில் வருமுன் காப்பது என்றும் அர்த்தம். சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான முரசு இடம்பெற்றிருக்கிறது. இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர். இதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.
 
நிவர் புயலைத் தொடர்ந்து, அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைப்படி புரேவி என்ற பெயர் வைக்கப்படும். இதுபோல, அடுத்த 25 வருடங்களில் ஏற்படும் புயல்களுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட்டு எப்போது புயல் வந்தாலும் அவற்றை சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் இருக்கின்றன.
 
பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.