1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (20:41 IST)

ஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்''

சீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஹுவாவே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹுவாவே நிறுவனத்துக்கும் டிரம்பின் அமெரிக்க அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. ஹுவாவேவின் தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
 
அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில் புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவேவைச் சேர்த்தார் டிரம்ப்.
 
அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.
 
ஹுவாவே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக திறன் பேசிகளை உருவாக்கி வந்தது. அடுத்த தலைமுறை 5 ஜி சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக ஹுவாவே கருதப்படுகிறது.
 
இந்நிலையில், பிரிட்டனின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தேர்வுக் குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்ள ஹுவாவே நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தலைவர் ஜான் சுஃபோல்க் அழைக்கப்பட்டிருந்தார்.
 
ஹுவாவே நிறுவன தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், அந்நிறுவனத்துக்கும் சீன அரசுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
 
''சீனாவோ அல்லது வேறு அரசுகளோ எங்களிடம் எதையும் எதிர்பார்த்து கேட்கவில்லை'' என்றார்.
 
''வெளியாட்கள் எங்களது தயாரிப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யவும் தொழில்நுட்ப ரீதியாக அல்லது கோடிங்கில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என சோதிப்பதையும் ஹுவாவே வரவேற்கிறது,'' எனக் குறிப்பிட்டார்.
 
''நாங்கள் இந்த உலகத்துக்குமுன் எவ்வித ஒளிவுமறைவின்றி நிற்கிறோம். நாங்கள் அப்படிச் செய்யவும் விரும்புகிறோம். ஏனெனில் அது எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த உதவுகிறது.''
 
''அவர்கள் எங்களிடம் இருந்து ஏதாவது கண்டுபிடிக்க விரும்புகிறோம். அவர்கள் ஒன்று கண்டுபிடித்தாலும் சரி ஓராயிரம் கண்டுபிடித்தாலும் சரி. நாங்கள் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. மக்கள் கண்டறிவதால் நாங்கள் சங்கடப்படப்போவதில்லை'' என்றார்.
 
அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளையும் ஹுவாவே தயாரிப்புகளை பயன்படுத்த தடுக்கக் கோருகிறது. சீன அரசு ஹுவாவே தயாரிப்புகளை கண்காணிப்புக்காக பயன்படுத்த முடியும் என்கிறது அமெரிக்கா.
 
'' சீன அரசோ அல்லது வேறு எந்த அரசோ எங்களிடம் எதையும் கேட்கவில்லை. இன்னொன்று சொல்கிறேன். அப்படி ஏதாவது செய்வது எங்களது தயாரிப்புகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும்,'' என்கிறார் சஃபோல்க்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து தங்களது கவலைகளை எழுப்பினர். ஷின்ஜியங் மாகாணத்தில் தடுப்பு மையத்தில் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் குறித்த செய்திகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
 
ஷின்ஜியங் மாகாணத்தில் கண்காணிப்புக்காக ஹுவாவே நிறுவன தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டதா? குறிப்பாக 2017 சீன உளவு சட்டத்தின்படி, தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் சீன உளவுத்துறை நிறுவனங்களுக்கு இணங்க வேண்டுமே என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர் .
 
''சீன அரசுடன் நாங்கள் பேசினோம். முழுவதுமாக விளக்கமளித்து தெளிவு பெற சில காலம் பிடித்தது. அதன் முடிவில், சீன அரசுக்கு எந்தவொரு நிறுவனமும் உளவுத் தகவல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்பது தெளிவானது. '' எனக் கூறினார்.
 
தொலைநிலை அணுகல்
பிரிட்டனின் 5 ஜி மொபைல் சேவை நெட்வொர்க்குகளை ஹுவாவே நிறுவனம் தொலை நிலையில் இருந்து அணுகமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.
 
அதற்கு பதிலளித்த சஃபோல்க், ''ஹுவாவே மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுக்கு தேவையான தொலைத் தொடர்புக்கான பொருள்களை வழங்கும் ஒரு நிறுவனம்'' என அழுத்தமாகச் சொன்னார்.
 
''நாங்கள் நெட்வொர்க்கை நடத்துவதில்லை. எங்களுக்கு நெட்வொர்க்கில் முழுவதும் இயங்கும் எந்தவொரு தரவையும் அணுகுவதற்கான அனுமதி இல்லை'' என அவர் தெரிவித்தார்.
 
மேலும், பிரிட்டனில் 5 ஜி நெட்வொர்க் அமைக்கத் தேவைப்படும் வெவ்வேறு விதமான உபகரணங்களை வழங்க முடியக்கூடிய ஒரே நிறுவனம் ஹுவாவே என்றார்.
 
இருப்பினும், ஒரு ஆப்பரேட்டருக்கு ஹுவாவே உபகரணங்களில் ஏதேனும் பிரச்சனை எனில், ரோமானியாவில் உள்ள எங்களது சேவை மையத்தின் வாயிலாக நாங்கள் தொலைநிலை அணுகல் மூலமாக பிரச்சனையை சரி செய்ய முடியும் என கூறினார்.
 
5 ஜி நெட்வொர்க் மூலமாக தனிப்பட்ட ஒரு பயனரை பின்தொடர முடியுமா எனத் தெரிந்துகொள்ள ஒரு கேள்வி எழுப்பினர் எம்.பிக்கள்.
 
அலைப்பேசி தொழில்நுட்பத்துக்கு மொபைல் ஆப்பரேட்டர்கள் பயனரின் அலைப்பேசியை தொடர்ச்சியாக பின்தொடரவேண்டியது அவசியம். பயனரை மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்க அப்படிச் செய்ய வேண்டும். ஆகவே, இந்த தொழில்நுட்பத் தேவையின்படி எல்லா நேரமும் தனது பயனரை ஆப்பரேட்டர் பின்தொடர்வார் என்றார் சஃபோல்க்
 
''ஹுவாவே நிறுவனத்தின் தயாரிப்புகளில் 30% கூறுகள் மட்டுமே ஹுவாவேவில் நேரடியாக தயாரிக்கப்படுகின்றன. மற்ற கூறுகள் உலகளாவிய விநியோக சங்கிலி வாயிலாக பெறப்படுகின்றன. அவற்றில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் இருக்கிறதா என்பதை அறிய ஹுவாவே தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது'' என்றும் அவர் தெரிவித்தார்.