வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (20:33 IST)

டெல்லி மாசுபாடு: "இது அவசரநிலையை விட மோசமான அவசரநிலை" - உச்சநீதிமன்றம்

"டெல்லி ஒவ்வோர் ஆண்டும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இது 10-15 நாட்களுக்கு நடக்கிறது. ஒரு நாகரிக நாட்டில் இது இப்படித் தொடர முடியாது" என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.

வாழ்வதற்கான உரிமை என்பது மிக முக்கியமானது. இப்படி நாம் தொடர்ந்து வாழ முடியாது என்றும் மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டது.

டெல்லி மாநகரில், வீடுகளுக்கு உள்ளே கூட, ஒரு அறைகூட பாதுகாப்பானதில்லை. நம் வாழ்வின் மதிப்புமிக்க ஆயுள் காலத்தை இதனால் நாம் இழக்கிறோம் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

அதீத உச்சத்தை அடைந்த டெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க என்ன செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும்படி மத்திய அரசையும், டெல்லி மாநில அரசையும் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

"மக்கள் மீண்டும் மீண்டும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோலவேதான் அவர்கள் செத்துக்கொண்டிருப்பார்களா?" என்று உச்சநீதிமன்றம் கேட்டது.

"நமது மூக்குக்கு கீழே இது நடக்கிறது. டெல்லிக்கு வரவேண்டாம் என்றோ, டெல்லியில் இருந்து திரும்பிப் போகவேண்டும் என்றோ மக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மாநில அரசுக்குப் பொறுப்பு உள்ளது. இந்த மாநிலத்திலும், அருகில் உள்ள மாநிலங்களிலும் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் நாம் நாசம் செய்துகொண்டிருக்கிறோம்" என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளர் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தில் தகவல் தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.

அவருக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே நடந்த விவாதம்:

நீதிமன்றம்: காற்று மாசுபாட்டை சமாளிக்க என்ன குறுகிய கால நடவடிக்கை எடுப்பது சாத்தியம்? உங்கள் திட்டம் என்ன? உடனடியாக என்ன செய்யவேண்டும்?

இணைச் செயலாளர்: மாசுத் துகள்கள் அதிகரிக்க பயிர்க்கழிவுகளை எரிப்பது முக்கியக் காரணம். அது நிறுத்தப்படவேண்டும்.

நீதிபதிகள்: மேக விதைப்புக் கருத்தாக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

இணைச் செயலாளர்: கடந்த ஆண்டு மேக விதைப்பு செய்யப்பட்டது. உடனடியாக செய்யவேண்டியது, டெல்லியில் நடக்கும் எல்லா கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவது. பஞ்சாப், ஹரியாணாவில் நடக்கும் பயிர்க் கழிவு எரிப்புகளை நிறுத்துவது.

நீதிபதி அருண் மிஸ்ரா: "நாம் அனைவரும் நம் ஆயுள் காலத்தில் ஒரு பகுதியை இழக்கிறோம். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. என்ன தீர்வு?"

இணைச் செயலாளர்: பயிர்க்கழிவு எரிப்பதை தடுக்க தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது ஒரு தீர்வு. தங்கள் ஊரில் யார் பயிர்க்கழிவு எரிப்பது என்பதை ஊராட்சித் தலைவர் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். ஊராட்சித் தலைவரை இதற்குப் பொறுப்பானவராக ஆக்கவேண்டும்.

நீதிபதி: எவ்வளவு பரப்பளவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதாக உங்களுடைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன?

இணைச் செயலாளர்: ஹரியாணாவில் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், பஞ்சாபில் நிலைமை மேம்படவில்லை என்றும் செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

தண்டனை, நீதிமன்றங்கள் தலையீடு ஆகியவை இதனைத் தடுக்க உதவும். விவசாயிகளுக்கு விடுக்கும் செய்தி உறுதியானதாக இருக்கவேண்டும் என்று சூழலியலாளர் சுனிதா நாராயணன் தெரிவித்தார். ஹரியாணாவில் பெருமளவில் பயிர்க்கழிவு எரிப்பது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், மாசுபாட்டுக்கான முக்கியக் காரணம் பஞ்சாப்தான் என்றும் அவர் தெரிவித்தார். தலைமைச் செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைப் பொறுப்பாக்கவேண்டும் என்று அவர் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அத்தியாவசியப் பண்டங்கள் கொண்டு செல்கிறவற்றைத் தவிர மற்ற எல்லா லாரிகளையும் தடை செய்யவேண்டும் என்று மூத்த வழக்குரைஞரும், நீதிமன்றத்தை வழிநடத்த (Amicus Curie) நியமிக்கப்பட்டவருமான அபராஜிதா சிங் தெரிவித்தார். சுற்றுச்சூழல் மிக மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் இதற்கான விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் பயிர்க்கழிவு எரிக்கப்படுவதைத் தடுக்காத தலைமைச் செயலாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பானை வழங்கப்படும். அவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படவேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு - தடுப்பு மற்றும் கட்டுப்பாடு- ஆணைய தலைவர் பூரே லால்: தலைமைச் செயலாளர்களை பொறுப்பாக்குங்கள். அப்போதுதான் பயிர்க் கழிவு எரிப்பைத் தடுக்க முடியும்.


நீதிபதி அருண் மிஸ்ரா: இது அவசர நிலையை விட மோசமான அவசரநிலை. இதைக் கட்டுப்படுத்தமுடியாத நாட்டில் நாம் வாழ்கிறோம். மக்கள் இறந்துகொண்டும், அழுதுகொண்டும் இருக்கிறார்கள். கார்களால் குறைவான மாசுபாடுதான் ஏற்படுகிறது.
டெல்லி அரசாங்க வழக்கறிஞர்: ஆட்டோ, டேக்சியில் எரிவாயு பயன்படுத்தப்படுவதால் அவற்றால் மாசுபாடு ஏற்படவில்லை. டீசல், பெட்ரோல் கார்கள்தான் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்கள் உள்ள கார்களை சுழற்சி முறையில் அனுமதிக்கும் திட்டத்தால் என்ன நன்மை கிடைக்கும்? மக்கள் வாகனங்கள் மூலம்தான் பயணிப்பார்கள். இதனால், ஆட்டோக்களும், டாக்சிகளும் அதிகம் பயன்படுத்தப்பட்டு அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும்.