கேரட் சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும்: டெல்லி மக்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை
டெல்லியில் வரலாறு காணாத வகையில் காற்றில் மாசு ஏற்பட்டுள்ளதால் அந்நகரத்தை விட்டு வேறு நகரங்களுக்கு செல்ல 40% மக்கள் விரும்புவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த காற்று மாசுபாட்டில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பள்ளிகள் விடுமுறை வாகன கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது
இந்த நிலையில் காற்று மாசுபாட்டில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கேரட் சாப்பிட வேண்டும் என்றும், கேரட் சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘கேரட் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் விட்டமின் ஏ , பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை பெற உதவுகிறது.மேலும் இரவு நேர பார்வை குறைபாட்டை போக்கும் என்பது இந்தியாவில் பொதுவான கருத்தாக உள்ளது. அது மட்டுமல்ல நமது உடலில் மாசு தொடர்பான நோய்களை தவிர்ப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற கேரட் உதவுகிறது என பதிவிட்டுள்ளார்.
காற்று மாசுபாட்டை சரிசெய்ய உடனடியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ‘கேரட் சாப்பிடுங்கள்’ என்று ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் காற்று மாசு பாடு குறித்த இண்டெக்ஸ் மதிப்பீடு 490 முதல் 500 வரையில் இருந்ததாகவும் குறிப்பாக அசோக் விஹார், ஆனந்த் விஹார், அரபிந்தோ மார்க் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது