வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (23:18 IST)

செஸ் ஒலிம்பியாட்: "தமிழ்நாட்டிற்கு சதுரங்கத்துடன் வலுவான கலாசார தொடர்பு உள்ளது" - பிரதமர் மோதி

தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோதி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
 
தொடக்க விழா மேடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
 
நிகழ்ச்சி தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
 
வரவேற்புரைக்கு பிறகு நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழ் வரலாறு குறித்த 3டி நிகழ்ச்சி அரங்கேறியது.
 
முன்னதாக இந்த தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிக்கப்பட்டது.
 
 
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய பிரதமர் மோதி ஆகியோரின் மணல் ஓவியங்களை வரைந்தார் சர்வம் பட்டேல். பின் போட்டியில் பங்கு பெறும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின் பரதநாட்டியம் உட்பட இந்தியாவின் 8 பாரம்பரிய நடன நிகழ்ச்சி அரங்கேறியது.
 
லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் இடம் பெற்றது. லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டி கொண்டு பியானோ வாசித்ததை கண்ட பார்வையாளர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.
 
விஸ்வநாதன் ஆனந்த், நடிகர் ரஜினிகாந்த், திமுக எம்.பி. கனிமொழி, மூத்த பத்திரிகையாளர் என். ராம், நடிகர் கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
 
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 4 மாதங்களில் சர்வதேச போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பது குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
 
மேலும் அவர், "இதற்கு முன் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெற்றதில்லை. முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
 
 
பிரதமர் மோதிக்கு இது இந்தியாவின் பெருமைக்குரிய தருணம் என்று தெரியும் அதனால்தான் அவரே இதை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளார்.
 
தொடக்க விழாவிற்கு கொரோனா காரணமாக நேரில் சென்று அவரை அழைக்க முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிக்க பிரதமர் தொடர்பு கொண்டார். அவரிடம் எனது நிலையை விளக்கினேன். நீங்கள் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று மோதி தெரிவித்தார்.
 
இது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடிய விழா என்று மோதி தெரிவித்தார்.
 
இது முதலில் ரஷ்யாவில் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின் கொரோனா மற்றும் பிற சூழலால் அங்கு இந்த போட்டி நடைபெறவில்லை.
 
இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் அதை நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு நான் உத்தரவிட்டேன். கடந்த மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.
 
இந்த ஏற்பாடுகளை கவனிக்க 18 துணை குழுக்களை தமிழ்நாடு உருவாக்கியது.
 
4 மாதங்களில் பன்னாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிறப்பாக செய்திருக்கிறது என்பதை நான் பெருமையுடன் தெரிவிக்கிறேன்.
 
இதன் மூலம் விளையாட்டுத் துறை மட்டுமல்ல சுற்றுலாத் துறையும் தொழில் துறையும் பெரும் அளவில் உயரும்.
 
இந்தியாவில் உள்ள 73 கிராண்ட மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
 
தமிழ்நாடு செஸ் விளையாட்டில் சிறந்து விளங்குகிறது என்பதில் எனக்கு பெருமை.
 
பல்லாயிரம் ஆண்டு வரலாறு பெற்ற கீழடியில் இரு வகையான ஆட்டக் காய்கள் கிடைத்துள்ளன.
 
அது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
போர் மரபிற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கீழடி நமக்கு சொல்கிறது." என்று பேசினார்.
 
 
பின்னர் பேசிய பிரதமர் மோதி, "தமிழகத்திற்கு சதுரங்கத்துடன் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது. இந்த ஒலிம்பியாட் நடைபெறுவதற்கு தமிழ்நாடு ஒரு சிறந்த தேர்வு" என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர், "சதுரங்கத்தின் மிகுந்த மரியாதைக்குரிய போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியா 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அனுசரிக்கும் இந்த வருடம் இந்த போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது.
 
குறைந்த காலத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பியாட் போட்டியில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. இந்த போட்டியில் அதிக அளவிலான அணிகள் பங்கு பெறுகின்றன.
 
தமிழ்நாட்டில் பல அழகான சிற்பங்கள் கொண்ட கோயில்கள் உள்ளன. அதில் பல விளையாட்டை குறிக்கும் சிற்பங்களும் உள்ளன. தமிழ்நாட்டிற்கு சதுரங்கத்துடன் வலுவான கலாசார தொடர்பு உள்ளது." என்று பேசினார்.
 
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்
 
 
தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்கிற சிறப்பை நிகழ்த்த உள்ளது.
 
பொதுவாக இந்த நிகழ்ச்சியின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்ய ஒவ்வொரு நாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கும்.
 
ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நான்கு மாதங்களில் அனைத்தையும் தயார் செய்துள்ளது.
 
இந்நிலையில் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் சாதனையை நிகழ்த்த இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.