என்.எல்.சியின் 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை: அன்புமணி அதிர்ச்சி தகவல்
என்.எல்.சியின் 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என பாமக தலைவர் அன்புமணி அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்.எல்.சி நிறுவனத்திற்கு கேட் (GATE) தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு பொறியாளர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!
பொறியாளர் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. வட இந்தியர்களுக்கு ஆதரவாக போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. என்.எல்.சியின் உயர்பதவிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பது தான் இதற்கு காரணம்!
என்.எல்.சி சுரங்கங்கள் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் பாட்டாளிகள். தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் வளர்ந்த என்.எல்.சி நிறுவனத்தின் பயன்களை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
என்.எல்.சி நியமனங்களில் மாநில ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே சமூக நீதியை நிலை நிறுத்த முடியும். பணியாளர்களில் 100%, அதிகாரிகளில் 50% பணிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவற்றிலும் நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடும், நிலம்கொடுத்தவர்களுக்கு முன்னுரிமையும் வழங்க என்.எல்.சி நிறுவனம் மறுத்தால், கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி என்.எல்.சிக்கு பூட்டு போடும் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்!