செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph

Breathe: Into the Shadows: தொடர் விமர்சனம்

தொடர்    Breathe: Into the Shadows
நடிகர்கள்    அபிஷேக் பச்சன், அமித் சத், நித்யா மேனன், நிழல்கள் ரவி, இவானா கௌர், சயாமி கெர், ப்ளபிதா போர்தாகூர்
ஒளிப்பதிவு    எஸ். பரத்வாஜ்
கதை    விக்ரம் டுலி
இசை    கரண் குல்கர்னி
இயக்கம்    மயாங்க் ஷர்மா


அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது.

தில்லியில் வசிக்கும் அவினாஷ் சபர்வால் (அபிஷேக் பச்சன்) ஒரு மனநல மருத்துவர். அவருடைய மனைவி அபா (நித்யா மேனன்) ஒரு சமையற்கலை நிபுணர். அவர்களுடைய ஆறு வயதுக் குழந்தை சியாவுக்கு நீரிழிவு நோய் உண்டு.

திடீரென ஒரு நாள் சியா காணாமல் போய்விடுகிறாள். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சியாவின் பெற்றோரைத் தொடர்புகொள்ளும் கடத்தல்காரன், தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யச் சொல்கிறான். இந்தத் தொடர் கொலைகள், கோபம், பயம், காமம் போன்ற மனிதனின் மோசமான குணங்களின் அடிப்படையில் அமைகின்றன. அவினாஷும் கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறான்.

இந்தக் கொலைகளை விசாரிக்க வருகிறான் கபீர் (அமித் சத்). சியாவைக் கடத்தியது யார், சம்பந்தமில்லாதவர்களைக் கொலைசெய்யச் சொல்வது ஏன், சியா மீட்கப்படுகிறாளா என்பது மீதிக் கதை.

இதில் மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 45-50 நிமிடங்கள் நீளம். முதலில் மிக மெதுவாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது திரைக்கதை. 5வது அத்தியாயத்தில் உச்சத்தைத் தொடுவதோடு, கதையிலும் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன. குழந்தையைக் கடத்தியது யார் என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். ஐந்தாவது பாகத்திலேயே இவ்வளவு பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிறகு, மீதமுள்ள ஏழு பாகங்களில் என்ன செய்யப்போகிறார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அஞ்சியதைப் போலவேதான் நடக்கிறது. குழந்தையைக் கடத்தியவன் யார் என்பது தெரிந்த பிறகு, வேகம் குறைவதோடு 'நான் - லீனியர்' பானியில் சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் ரொம்பவும் சோதிக்கின்றன.

இந்தத் தொடரை முழுக்க முழுக்க தூக்கிச் சுமக்கிறார் அபிஷேக் பச்சன். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பித்துவிடுகிறது. காவல்துறை அதிகாரியாக வரும் அமித் சத், பல காட்சிகளில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் நின்று கொண்டிருக்கிறார் அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் சுடர்களாக ஜொலிக்கிறார்கள். சிறுமியின் தாயாக வரும் நித்யா மேனன், கபீரின் தோழியாக வரும் ப்ளபிதா, சிறுமியாக வரும் இவானா கௌர், பாலியல் தொழிலாளியாக வரும் சயாமி கெர் ஆகிய அனைத்து பெண் பாத்திரங்களுமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

மத அடிப்படையிலான குறியீட்டுக் காட்சிகள், உளவியல் ரீதியான விளக்கங்கள் என இந்தத் தொடரில் கவனிக்க நிறையவே இருக்கிறது. ஆனால், சொதப்பலான திரைக்கதை எல்லாவற்றையும் வீணாக்கியிருக்கிறது.