எத்தியோப்பிய விமான விபத்து: விமர்சனத்துக்குள்ளாகும் போயிங் நிறுவனம்

01
Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (11:15 IST)
எத்தியோப்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்ததை அடுத்து, அந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
 
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு (கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.
 
இதே ரக விமானம் ஒன்று இந்தியோனீசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
எத்தியோப்பிய விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
 
அடிஸ் அபாபாவின் போலே சர்வதேச விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டெவோல்டே ஜெப்ரிமரியம் '' இந்த சூழலில் எதையும் உறுதியாக தெளிவாக கூறமுடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்'' என்றார்.
 
அந்த விமானத்தில் 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாக ஜெப்ரிமரியம் குறிப்பிட்டார்.
02
 
கென்யர்கள் 32 பேர், கனடியர்கள் 18 பேர், எத்தியோப்பியர்கள் 9 பேர், இத்தாலியர்கள் 8 பேர், சீனர்கள் 8 பேர், அமெரிக்கர்கள் 8 பேர், பிரிட்டானியர்கள் 7 பேர், பிரெஞ்சுக்காரர்கள் 7 பேர், எகிப்தியர்கள் 6 பேர், ஜெர்மனியர்கள் 5 பேர், ஸ்லோவாகியர்கள் 4 பேர் மற்றும் இந்தியர்கள் 4 பேர் இதில் பயணித்துள்ளனர்.
 
ஆஸ்திரியர்கள் மூவர், சுவீடனைச் சேர்ந்த மூவர், ரஷ்யர்கள் மூவர், மொரோக்கோவைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர், போலந்தைச் சேர்த்த இருவர், இஸ்ரேலியர்கள் இருவர் ஆகியோரும் இந்த விமானத்தில் இருந்துள்ளனர்.
boeing
 
இதைத் தவிர சவூதி அரேபியா, இந்தோனீசியா, நார்வே, உகாண்டா, சூடான், யேமென் உள்பட 15 நாடுகளில் இருந்து தலா ஒருவரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்கள்.
 
இந்த விபத்தை அடுத்து, எத்தியோப்பியா இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கிறது.

இதில் மேலும் படிக்கவும் :