வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:16 IST)

ஒரே பந்தில் 16 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்: எப்படி சாத்தியமானது?

Steve Smith
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார்

இது நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் நடந்திருக்கிறது. ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இந்த அரிதான சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஜோயல் பாரிஸ் பந்துவீச்சில் இந்த மைல்கல்லை ஸ்மித் எட்டியுள்ளார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரை பாரிஸ் வீச வந்தார். பேட்டிங் முனையில் ஸ்மித் இருந்தார். முதலிரண்டு பந்துகளில் ரன் ஏதும் வரவில்லை. 

ஜோயல் பாரிஸ் வீசிய மூன்றாவது பந்தில் ஸ்மித் சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஸ்கொயர் லெக் திசையில் ஸ்மித் அட்டகாசமாக ஃபிளிக் செய்ய, பந்து மேலே பறந்து எல்லைக்கோட்டைக் கடந்தது. அதேநேரத்தில், பந்துவீசும் போது ஜோயல் பாரிஸ், கிரீசுக்கு வெளியே சென்றதை உறுதிப்படுத்திய நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். 

அதாவது, அந்த ஓவரில் இதுவரை வீசப்படாத மூன்றாவது பந்தில் ஸ்மித் 7 ரன்களை சேர்த்திருந்தார். அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட்டாக பாரிஸ் வீச வேண்டியிருந்தது. இந்த பந்தை அவர் வைடாக வீச, அது விக்கெட் கீப்பரை தாண்டி ஃபைன் லெக் திசையில் பவுண்டரி ஆனது. இதன் மூலம் 5 ரன்கள் கிடைத்தன. 

அந்த வேளையில், அதுவரை வீசப்படாத மூன்றாவது பந்தில் ஸ்மித் 12 ரன்களை சேர்த்திருந்தார். இதனால், அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட்டாக அமைந்தது. அந்த பந்தில் ஸ்மித் பவுண்டரி விளாசினார். 

இப்படித்தான், கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 16 ரன்களை ஸ்மித் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 66 ரன்களை சேர்த்தார். அவரது அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களைக் குவித்தது. இந்த இலக்கை துரத்திய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால் 156 ரன்களையே எடுக்க முடிந்தது. 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஸ்டீவன் ஸ்மித் இருபது ஓவர் பேட்ஸ்மேனாகவே கருதப்படுவதில்லை. அவர் தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். முந்தைய போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிராக அவர் அட்டகாசமாக ஆடி சதம் கண்டார். அதற்கும் முந்தைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடித்தார். தொடர்ந்து 2 சதங்களை விளாசிய ஸ்மித், அடுத்தபடியாக இந்த ஆட்டத்தில் அதிரடியாக 66 ரன்களை சேர்த்துள்ளார். 

மறுபுறம், ஒரே பந்தில் 16 ரன்களை வாரிக் கொடுத்த ஜோயல் பாரிஸ் மொத்தம் 3 ஓவர்களை வீசி 32 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார். 

30 வயதான ஜோயல் பாரிஸ் ஆஸ்திரேலியாவுக்காக 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அந்த இரு போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய அவர், முதல் விக்கெட்டாக ஷிகர் தவானை வீழ்த்தினார். 

ஐ.பி.எல். தொடரில் 2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்த பாரிஸ், காயம் காரணமாக ஒரு ஆட்டத்தில்கூட விளையாட முடியாமல் போனது.