கோவையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை
கோவை துடியலூர் பகுதியில் காணாமல்போன ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர்.
ஆனால், சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர்.
இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் குழந்தையின் பெற்றோரின் வீட்டிற்கு அருகே காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை வெளியான, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போக்சோ பிரிவையும் தடாகம் காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மக்களவை தேர்தல் 2019: 50 மில்லியன் குடும்பங்களின் வருவாய்க்கு வாக்குறுதியளிக்கும் காங்கிரஸ்
இந்நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி, துடியலூர் பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நான்கு மணிநேரமாக சாலை மறியல் செய்தவர்களிடம் நாளை மாலை 3 மணிக்குள் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த 4 பேரை காவல்துறையினர் பெற்றோர்களிடம் காணொளி காட்சிகளின் மூலம் காட்டியதால் பெற்றோர்கள் சிறுமியின் உடலை வாங்க சம்மதித்தனர்.