ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (19:47 IST)

தமிழ்நாட்டு மக்களைக் கவர பாஜக மேற்கொண்ட 5 முக்கிய முயற்சிகள்

BJP
தமிழ்நாட்டு மக்களைக் கவர்வதற்காக பாரதிய ஜனதா கட்சி கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அவற்றுள் 5 முக்கியமான முயற்சிகளையும் அவற்றுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்தது என்பது பற்றியும் இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.



கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களை வென்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றது. முன்னாள் முதலமைச்சர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் இந்த முடிவுகள் அகில இந்திய அளவில் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.

அந்தத் தருணத்தில் இருந்தே பாஜக தமிழ்நாட்டின் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தத் துவங்கியதாக கூறப்பட்டது.

முதற்கட்டமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மாற்றப்பட்டு எல். முருகன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் கே. அண்ணாமலை மாநிலத் தலைவராக்கப்பட்டார். ஆனால், எல். முருகன் மாநிலத் தலைவராக்கப்பட்டதில் இருந்தே பாஜகவின் முயற்சிகள் துவங்கின.

இப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு வாக்காளர்களை ஈர்க்கப் பல முக்கிய நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி எடுத்தது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஐந்து முயற்சிகள் என்ன?

1. எல். முருகனின் வேல் யாத்திரை

எல். முருகன் மாநிலத் தலைவராக்கப்பட்டதில் இருந்தே மாநில அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படும் கட்சியாக மாற பாஜக முடிவெடுத்தது தெளிவாகத் தெரிந்தது. யூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டிய அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வேல் யாத்திரை நடத்தினார்.

கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் நடந்த இந்த வேல் யாத்திரை, பாஜக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த கவனத்தை அதற்குத் தந்தது.

ஆனால், இதற்கடுத்த சில மாதங்களிலேயே வந்த சட்டமன்றத் தேர்தலில் அது பெரிய அளவிலான வெற்றியாக மாறவில்லை. அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்றது.

2. கே. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை

சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே எல். முருகன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, கே. அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்களவை தேர்தலுக்கு ஓராண்டு இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் வகையில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை மேற்கொண்டார் கே. அண்ணாமலை. இந்த யாத்திரை ஃபிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழா பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க மிகப்பெரிய பொதுக் கூட்டமாக நடத்தப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த யாத்திரையின் போது பெருமளவில் மக்களைச் சந்திப்பது, செய்தியாளர்களைச் சந்திப்பது, வேறு கட்சியின் நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது என தீவிரமாகச் செயல்பட்டார் கே. அண்ணாமலை.

3. காசி தமிழ்ச் சங்கமம்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் வாரணாசியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐஐடியும் நிதியுதவி செய்தன. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவளிக்கவில்லை என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

ஆனால் தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென மாநில அரசு தெரிவித்தது. 2,000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரும் உற்சாகம் காட்டினார்.

காசிக்குச் செல்லும் ரயிலை வழியனுப்பி வைத்ததோடு, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்று திரும்பி வந்தவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி ஒரு வெகுமக்கள் நிகழ்ச்சியாக மாறவில்லை.

4. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செங்கோல்

இந்திய நாடாளுமன்றத்திற்கு என புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு, 2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாடுதுறை ஆதீனத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென ஒரு வரலாற்று விளக்கத்தையும் மத்திய அரசு அளித்தது.

அதாவது, "இந்தியா சுதந்திரமடையும் நாள் நெருங்கியபோது, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு ஆட்சியைக் கை மாற்றியளிப்பதைக் குறிக்க என்ன செய்யலாம் என அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுன்ட்பேட்டன் பிரபு, நேருவிடம் கேட்டார். இதையடுத்து நேரு, ராஜாஜியின் உதவியை நாடினார். ராஜாஜி, செங்கோலை அடையாளமாகப் பயன்படுத்தலாம் எனச் சொன்னார். அதன்படி, தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் ஐந்தடி நீளத்தில் ஒரு செங்கோலைத் தயாரித்து, அதனை நேருவிடம் அளிக்க, அந்தச் செங்கோல், ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மாற்றிக்கொள்ளப்பட்டது" எனக் கூறப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கே அழைத்துச் செல்லப்பட்டனர். நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்திலும் நிறுவப்பட்டது. இதன் மூலம், தமிழ் அடையாளத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சில நாட்களிலேயே இதுபோல அதிகாரமாற்றம் நடந்தது குறித்து வரலாற்றாசிரியர்களும் ஊடகக் கட்டுரைகளும் கேள்விகளை எழுப்பின. வெகு விரைவிலேயே இது குறித்த விவாதங்கள் பொது வெளியிலிருந்து மறைந்தன.

5. தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோதியின் வருகைகள்

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோதி. இந்த ஆண்டு ஜனவரியிலில் துவங்கி, மார்ச் 15ஆம் தேதிக்குள் 6 முறை வருகை தந்தார் பிரதமர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே நடைபெற்றதால், அதற்கு முன்பாக மேலும் சில தடவைகள் வருகை தந்தார் பிரதமர் மோதி. பல பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்கள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டாவுக்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள திருவரங்கத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் வருகை தந்தார். இந்த வருகை மிகுந்த முக்கியத்துவத்துடன் ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டது.

இருந்தபோதும் தேர்தல் நெருக்கத்தில், பிரதமர் மோதியின் தமிழக வருகை எதிர்பார்த்த உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சென்னையில் நடந்த ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் திரளவில்லை என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.