தமிழ்நாட்டில் இனி கட்டிட அனுமதி பெறுவது ரொம்ப ஈசி.. தமிழக அரசின் முக்கிய அறிவிபு..
தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி மற்றும் கட்டண வசூல் முறையில் பொதுமக்களும் பில்டர்களும் பெரிதும் நிம்மதியடையும் வகையில் நகராட்சி நிர்வாக இயக்குநரால் ஒரு அதிரடியான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் கிரெடாய் தலைவர் அளித்த மனுவின் அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கையின் மூலம் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை திருத்தப்பட்ட கட்டிட வரைபட அனுமதி கோரும் போது, ஏற்கனவே அனுமதி பெற்று கட்டணம் செலுத்திய பரப்பளவையும் சேர்த்து மொத்த கட்டிட பரப்பளவிற்கும் சேர்த்து இரட்டை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் கட்டுமானத் துறையினருக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டு வந்தது. ஆனால் இனிமேல், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு கட்டணம் செலுத்தப்பட்ட பரப்பளவைக் கழித்துவிட்டு, புதிதாகக் கோரப்படும் கூடுதல் கட்டிட பரப்பளவிற்கு மட்டும் ஒருங்கிணைந்த கட்டணத்தைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஏற்கனவே 1,00,000 சதுர அடிக்கு அனுமதி பெற்று கட்டணம் செலுத்தியவர்கள் கூடுதலாக 10,000 சதுர அடி கேட்டால், இனி மொத்தமுள்ள 1,10,000 சதுர அடிக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாறாக, புதிதாகக் கேட்கும் அந்த 10,000 சதுர அடிக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. இந்த முறையால் பில்டர்களுக்கு பல லட்சம் ரூபாய் பணம் மிச்சமாவதுடன், வீடு கட்டுபவர்களுக்கும் மிகப்பெரிய நிதிச்சுமை குறைகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீரான கணக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுவதால் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

