1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:14 IST)

கோவிட் 19 - ஹெர்ட் இம்யூனிட்டி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

ஹெர்ட் இம்யூனிட்டி

கொரோனா வைரஸுக்கு தீர்வாக சில ஹெர்ட் இம்யூனிட்டி எனும் மந்தை எதிர்ப்பு சக்தியை பரிந்துரைக்கின்றனர்.

ஹெர்ட் இம்யூனிட்டி பற்றி மருத்துவர் பரூக் அப்துல்லா என்பவரின் பதிவு மந்தை எதிர்ப்பு சக்தி என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்துகொள்ள உதவும்.

HERD IMMUNITY என்றால் என்ன???
ஒரு ஆட்டு மந்தையில் நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் இருபது ஆடுகள் பலம் குன்றியவை.மீதம் எண்பது ஆடுகள் நன்றாக வளர்ந்து வலிமை மிக்கவையாக இருக்கின்றன. ஒரு சிங்கம் அந்த மந்தையை தாக்க முற்படும் போது வலிமை பொருந்திய அந்த எண்பது ஆடுகளும் ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொண்டு மீதம் உள்ள இருபது ஆடுகளை காப்பது தான்.

"மந்தை எதிர்ப்பு சக்தியின் அடிப்படை"
இந்த அடிப்படையை நாம் தொற்று நோய் பரவலில் பொருத்திப்பார்க்க முடியும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை சதவிகிதம் அந்த கொள்ளை நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் மீதம் இருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்படும்.

உதாரணம்
பல ஆயிரம் ஆண்டுகளாக கிட்டத்தட்ட 90% இறப்பு விகிதம் கொண்டு விளங்கிய பெரியம்மை( Small pox ) எனும் கொள்ளை நோயை பூமியை விட்டு அழித்தொழிக்க நமக்கு உதவியது "தடுப்பூசி மூலம் கிடைத்த மந்தை எதிர்ப்பு சக்தியே" ஆகும். உலகத்தின் 80% மக்கள் தொகைக்கு அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை போட்டு அந்த நோயை உண்டாக்கும் வைரஸை பரவாமல் தடுத்து உலகத்தில் இருந்து குட் பை சொன்னோம். கிட்டத்தட்ட அதே வழியை பின்பற்றி இன்று போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பு சொட்டு மருந்து மூலம் நம் நாட்டை விட்டு வெளியேற்றி வெற்றி கண்டிருக்கிறோம்
மீசில்ஸ் எனும் மிக எளிதாக வீரியமாக தொற்றக்கூடிய விளையாட்டம்மை எனும் தொற்று நோய்க்கு 95% மக்களை தடுப்பூசி வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். குழந்தை பிறந்ததும் ஒன்பதாவது மாதம் நிறைவடைந்தவுடன் போடும் தடுப்பூசி மீசில்ஸ்க்கு எதிரானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படியாக ஹெர்ட் இம்யூனிட்டியை தடுப்பூசி மூலம் பெற்றால் அந்த நோய் சமூகத்தில் பரவுவது தடுக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சரி.. கோவிட்-19 உருவாக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக எப்படி ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்குவது???
அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


முதல் வழி
அந்த தொற்று நோயை அதன் போக்கில் சமூகத்தில் பரவ விட்டு அதன் மூலம் பெரும்பான்மை மக்கள் நோய் தொற்று பெற்று அதன் மூலம் அவர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்வது.இதை "நோய் தொற்று மூலம் அடையும் எதிர்ப்பு சக்தி" என்று கூறுவோம் (INFECTION INDUCED IMMUNITY)

இரண்டாவது வழி
அந்த தொற்று நோயை உருவாக்கும் வைரஸ்க்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டறிந்து அதை பெரும்பான்மை மக்கள் தொகைக்கு செலுத்தி அதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அடைவது. இதை "தடுப்பூசி மூலம் அடையும் எதிர்ப்பு சக்தி" ( VACCINE INDUCED IMMUNITY)
மேற்சொன்ன இரண்டு வழிகளிலும் கொரோனா வைரஸ் பரவும் தன்மைகளை வைத்து ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 60% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும்.  தடுப்பூசி கையில் வரும் வரை முதல் வழியை தேர்ந்தெடுக்க முடியுமா???

அதில் உள்ள பெரிய சிக்கல் யாதெனில் கொள்ளை நோயின் வீரியத்தை அறியாமல் அதை சமூகத்தில் பரவ அனுமதித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டி வரும். மிக அதிகமான அளவில் சீரியஸ் மற்றும் க்ரிடிக்கல் கேஸ்கள் வரும். மேலும் அந்த கொள்ளை நோய் எந்த வயதினரை குறி வைக்கிறதோ அந்த வயதினரிடம் மிக அதிக மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதே முறையை பிரிட்டன் சில வாரங்கள் முன்பு தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த முற்பட்டது. அவர்களது திட்டம் யாதெனில் கோவிட்-19 அதிகம் சேதத்தை உண்டாக்கும். முதியோர்களை மட்டும் வீடுகளுக்குள் மூன்று மாதம் பாதுகாப்பது. மிச்சம் உள்ள சமுதாயத்துக்கு தானாக நோய் தொற்று உண்டாகி அதன் மூலம் மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவது என்ற திட்டம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்போது பிரிட்டன் இரண்டாவது வழிக்கு இறங்கி வந்திருக்கிறது.

முதல் வழியை நோக்கி சென்ற சில வாரங்களுக்கு பகரமாக அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதை காண்கிறோம் சரி இரண்டாவது வழியை தேர்ந்தெடுப்போம் என்றால் புதிய கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி பல அக்னிப்பரீட்சைகள் கடந்து நம்மை வந்தடைய ஆறு மாதம் --ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் ஆகும். மேலும் புதிய கொரோனா வைரஸ் நாட்டுக்கு நாடு வேறு வேறு விதமாக தன்னை உருமாற்றம் செய்து கொண்டு வெளிப்படுகிறது (MUTATIONS). அதுபோக வைரஸ்கள் இயல்பாகவே காலப்போக்கில் உருவ அமைப்பிலும் அவை நடந்து கொள்ளும் விதத்திலும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. இதனால் தான் ப்ளூ வைரஸ்க்கு எதிராக வருடாவருடம் தடுப்பூசி போடும் வழக்கம் உள்ளது. மேலும் தடுப்பூசியே வந்தாலும் அதை 60% க்கு மேல் மக்கள் தொகை போட்டுக்கொண்டால் தான் நம்மால் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும். 60% மக்கள் தடுப்பூசி போட்டுகொள்வதால் மீதம் உள்ள மக்களுள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க இயலும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்கள் யார்?
1 எச்.ஐ.வி தொற்று போன்ற ஏற்கனவே எதிர்ப்பு சக்தி குறைவாக்கும் நோய் இருப்பவர்களுக்கு
2 கர்ப்பிணிகள்
3 நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பவர்கள் ( புற்று நோய் இருப்பவர்கள்/ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த வர்கள்/ ஆட்டோ இம்யூன் வியாதிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைக்கும் மருந்துகள் எடுப்பவர்கள்)

மேற்சொன்னவர்களுக்கு உயிருள்ள மட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசி போட முடியாது இவர்கள் அனைவரையும் காப்பதற்கு ஒட்டுமொத்த சமூகத்தில் பெரும்பான்மை தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த தொற்று பரவாமல் தடுப்பதே "ஹெர்ட் இம்யூனிட்டியின்" சாராம்சம் தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்கள். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை. இதனால் ஹெர்ட் இம்யூனிட்டி மூலம் சமூகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டு வந்த டிப்தீரியா (தொண்டை அடைப்பான்) மீசில்ஸ் ( விளையாட்டம்மை) போன்ற நோய்கள் ஆங்காங்கே கொள்ளை நோய்களாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

எனவே சொந்தங்களே… தயவு கூர்ந்து நமக்கும் நமது குழந்தைகளுக்கும் உயிரைக்கொல்லும் அல்லது உடலை முடமாக்கும் என்று அறியப்பட்ட தொற்று நோய்களுக்கு தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளித்து சமூகத்தின் மந்தை எதிர்ப்பு சக்தியை தக்கவைக்க உதவுங்கள்

நன்றி
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை