செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (17:12 IST)

சன் டிவியை வம்புக்கு இழுக்கும் எச் ராஜா!!

சன் குழுமம் வாடிக்கையாளர்களிடமிருந்து 3 மாதம் சந்தா வசூலிக்க மாட்டோம் என்று கூறவேண்டியதானே என எச் ராஜா கேட்டுள்ளார். 
 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஒருவர் உபதேசிப்பதற்கு முன்பாக தான் கடைபிடிக்க வேண்டும். சன் குழுமம் கொரோனா பாதிப்பு காரணமாக வாடிக்கையாளர்களிடமிருந்து 3 மாதம் சந்தா வசூலிக்க மாட்டோம் என்று கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் அறிவித்திருக்கலாமே என பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு திமுகவினர் சிலர் பதிலடியும் கொடுத்து வருகின்றனர். ஏனெனில், கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் தனது சார்பில் ரூபாய் 10 கோடி நிதி உதவி செய்துள்ளது. மேலும் ரூ.10 கோடி மட்டுமின்றி சன் டிவி குழுமத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 6 ஆயிரம் பேர்களின் ஒரு நாள் ஊதியமும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக சன் டிவி குழுமம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.