அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா சசிகலா: அதிரடி அறிக்கை
சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தமிழக அரசியலில் புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் கிட்டத்தட்ட அரசியலை விட்டு விலகுவது போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி 'தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபடவேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, தலைவியின் அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.
இவ்வாறு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்