வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (07:33 IST)

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

Annamalai edapadi
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை அகற்றுவது தான் முக்கியம் என்று கூறியதை அடுத்து பாஜகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியாக இருந்த நிலையில் திடீரென இந்த கூட்டணி பிரிந்தது. இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்தால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுகவுக்கு எதிரான கட்சிகள் ஒரே அணியில் இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் நெருங்கும் போது தான் யாருடன் யார் கூட்டணி என்பது தெரியவரும். அதிமுகவை பொறுத்தவரை எங்களுடைய தலைமையை ஏற்று வரும், ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திப்போம். லஞ்ச லாவண்ய திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக எடப்பாடி பழனிச்சாமி கூறாததால், மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Siva