செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (12:13 IST)

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Krishnagiri

திருவண்ணாமலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது போல கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை மகாதீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையடிவார பகுதியில் வசித்த 7 பேர் பலியானார்கள்.

 

இந்நிலையில் அப்படியானதொரு சம்பவம் கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள பழைய பேட்டையில் உள்ள மலையில் இருந்து காலை ராட்சத பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.

 

அடிவாரத்தில் உள்ள மேல்தெருவிற்கு உருண்டு வந்த பாறை அங்கு வெங்கடாச்சலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது மோதியது. இதில் அவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்த நிலையில், அங்கிருந்தவர்களும், தெரு மக்களும் அலறியடித்து வெளியேறியுள்ளனர். அந்த வீட்டின் அருகே மற்றொரு சிறு பாறையும் இருந்ததால் அதில் மோதி ராட்சத பாறை நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

 

இல்லாவிட்டால் பாறை முழு வேகத்தில் உருண்டு வந்து 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அப்பகுதியில் நாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடம் விரைந்துள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K