முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..!
முதலமைச்சருக்கு வாங்கிய சமோசா காணாமல் போனதை அடுத்து, இது குறித்து விசாரணை செய்ய சிஐடிக்கு உத்தரவிட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்து வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரின் பாதுகாப்புக்காக வந்த அதிகாரிகள் அவற்றை சாப்பிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசா எப்படி காணாமல் போனது என்பதை கண்டுபிடிக்க சிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, காணாமல் போன சமோசாவை தேடி காங்கிரஸ் அரசு விசாரணை மேற்கொள்கிறது என்றும், இதிலிருந்து இந்த ஆட்சியின் இலட்சணத்தை புரிந்து கொள்ளலாம் என்றும் பாஜக கேலி செய்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த சிஐடி இயக்குனர், இது துறையின் விவகாரம், விசாரணைக்கு உத்தரவு பிறபிக்கவில்லை. இந்த சம்பவம் வேண்டுமென்றே பெரிதாக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு வாங்கிய சமோசா எங்கே போனது என சாதாரணமாக பேசப்பட்டது, இந்த சம்பவம் தான் ஊதி பெரிதாக பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran