மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!
10,11,12 வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், மழை பாதித்த பகுதிகளில் மட்டும் செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் பெரு வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வு ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும், டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்ட அரையாண்டு தேர்வு மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் ஜனவரியில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தலைமை ஆசிரியர் அலுவலகம், சான்றிதழ் வைத்திருக்கும் அலுவலகத்தை முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
Edited by Mahendran