செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைத்தவுடன் அவசரமாக அமைச்சராகி விட்டீர்கள். வழக்கில் சம்பந்தப்பட்டவர் அமைச்சர் ஆனதால், வழக்கின் சாட்சிகள் பயப்படுவார்கள் என்ற மனுதாரர்களின் குற்றச்சாட்டு நியாயம் உள்ளது. இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவு குறித்து சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்த போது, "செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பேற்றது பற்றி நீதிமன்றத்தின் கருத்து குறித்து கேள்வி கேட்கிறார்கள். ஒருவரை அமைச்சராக்குவது, நீக்குவது முதலமைச்சரின் முழு உரிமை.
செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் போதும் அவர் அமைச்சர் தான். சிறையில் இருந்த காலத்திலும் கூட அவர் அமைச்சராகவே இருந்தார். இப்போது வெளியே வந்தவுடன் மீண்டும் அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார். இதில் எந்த அவசரமும் இல்லை," என்று கூறினார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran