செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (10:59 IST)

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

கவுன்சிலர் ஸ்டாலின், திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144வது வட்ட செயலாளராக இருந்து வந்தார். குடிநீர், கழிவுநீர் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்னதாக சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச் செல்வி ஆகியோர் கோயம்பேடு போலீசில் அளித்த புகாரை அடுத்து தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 3 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

 இந்த நிலையில்  கவுன்சிலர் ஸ்டாலினை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்குப்பகுதி, 144-வது வட்டச்செயலாளரான சென்னை மாநகராட்சி உறுப்பினர் ஏ.ஸ்டாலின் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். ",


Edited by Siva