திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:39 IST)

லாலு பிரசாத் மேலும் ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு!

லாலு பிரசாத் ஐந்து கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளிலும் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

 
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டோராண்டா அரசு கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக ரூ.139.35 கோடி அளவுக்கு பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய வழக்கில் அவரை குற்றவாளி என்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இத்துடன் லாலு பிரசாத் ஐந்து கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளிலும் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் நீதிபதி சி.கே. சஷி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிப்பதையொட்டி நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 98 பேரும் ஆஜராகினர், அவர்களில் 24 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி சஷி அறிவித்தார்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்களில் முன்னாள் எம்பி ஜெகதீஷ் சர்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழு (பிஏசி) தலைவர் துருவ் பகத் உட்பட 35 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் அவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் உரிமை பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 39 குற்றவாளிகள் மீதான தண்டனை தொடர்பான வாதங்கள் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார். லாலு பிரசாத் யாதவ் மீது 950 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கெனவே அவர் குற்றவாளி என விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ. 37.7 கோடி மற்றும் ரூ. 33.13 கோடி எடுத்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ. 89.27 கோடி மற்றும் ரூ. 3.76 கோடி மோசடி எடுத்தது ஆகிய வழக்குகள் இதில் அடங்கும். தும்கா கருவூல பணம் கையாடல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையுடன் ரூ. 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
அந்த நான்கு தீர்ப்புகளையும் எதிர்த்து லாலு பிரசாத் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வரிசையில் தற்போதைய வழக்கின் தீர்ப்பையும் எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.