செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (12:35 IST)

நவம்பர் 15 கிரிக்கெட்டின் திருப்புமுனை நாள் –சச்சின் எண்ட்ரி & எக்ஸிட்

29 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுகர் தனது முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்கினார்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிதான் 16 வயதான சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். பாகிஸ்தானின் பலமான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த போட்டியில் தடுமாறினாலும் அதற்கடுத்த 20 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

தான் கிரிக்கெட் விளையாடிய 24 ஆண்டுகாலத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 34000 க்கும் அதிகமாக சர்வதேச ரன்கள், 100 சர்வதேசப் போட்டி சதங்கள், முதல் முதலாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம், டெஸ்ட் அங்கிகாரம் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் எதிராக சதம் என கணக்கிலடங்கா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவையணைத்தையும் அவர் வாசிம் அக்ரம், வக்கார் யுனீஸ், மெக்ராத், வார்ன், ப்ரெட் லீ, அக்தர், முரளிதரன், பொல்லாக், டொனால்டு என ஜாம்பவான் பவுலர்கள் கோலோச்சிய காலத்தில் நிகழ்த்தினார் என்பதுதான் தனிச்சிறப்பு.

சாதனைகள் மட்டுமல்லாமல் மைதானத்தில் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதிலும் சச்சின் ஒரு மாஸ்டர்தான். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சர்ச்சைகளில் சிக்கியது வெகு அபூர்வம்தான். கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்பதை சச்சின் விளையாடிய விதத்தைப் பார்த்தவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொள்வார்கள். பலமுறை அம்ப்பயர்களால் தவறாக விக்கெட் கொடுக்கப்பட்ட போதும் சச்சின் தனது அதிருப்தியை வெளிக்காட்டாமல் பெவிலியன் திரும்புவார். அதேப் போல தனக்கு அவுட் எனத் தெரிந்தால், நடுவரின் முடிவுக்குக் காத்திராமல் தானாகவே வெளியேறுவார்.

அதேப்போல எந்த நாளில் அறிமுகமானாரோ அதே நாளில்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய களமிறனார். 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நவம்பர் 15 அன்றுதான் தனது 200 டெஸ்ட்டில் களமிறங்கினார்.