வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (08:52 IST)

காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம் –கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி கருத்து!

இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையில் சிக்கி இன்னும் தீராத பிரச்சனையாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சனைக் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியா ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வாங்கிய போது சில அரசியல் காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது பல இடங்களில் கலவரங்கள் நடந்து அப்பாவியான பொதுமக்கள் கொல்லப்பட்டது வரலாற்று சோகம். பிரிவினைக்குப் பின் காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானோ காஷ்மீர் தங்களுக்குதான் சொந்தம் எனக் கூறி வருகிறது. இந்தியாவோ காஷ்மீரைக் கொடுப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காஷ்மீரின் ஒரு சிலப் பிரிவினரோ நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என யாரோடும் இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு தனிநாடு வேண்டும் எனப் போராடி வருகின்றன. இந்த மூன்று மாறுபட்ட கருத்துகளால் காஷ்மீரில் 70 ஆண்டுகளாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி தனது கருத்தைக் கூறியுள்ளார். இங்கிலாந்தில் மாணவர்களோடு கலந்துரையாடிய அவர் இந்தியா- பாகிஸ்தான் - காஷ்மீர் பிரிவினைக் குறித்து ’பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவைவில்லை என்றே நான் கூறுவேன். காஷ்மீரை  இந்தியாவிடமும் கொடுக்கக் கூடாது. காஷ்மீர் தனியாக சுதந்திரமாக இருக்கட்டும். குறைந்தபட்சம் மனிதமாவது உயிரோடு இருக்கும். மக்கள் இறக்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்கு காஷ்மீரை தேவையில்லை. பாகிஸ்தானால், அதன் நான்கு மாகாணங்களை கூட சரியாக நிர்வகிக்க முடியவில்லை. மனிதர்களின் இறப்பு, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது மிகுந்த வலியைக் கொடுக்கிறது’ என தெரிவித்துள்ளார்.